சுற்றுலா, உற்பத்தி, விவசாயம் மற்றும் கல்வி சார் தொழில்நுட்பத் துறைகளில் புதிய முதலீட்டாளர்களுக்கு ஆறு முதல் பத்து ஆண்டுகள் வரை வரிச்சலுகைக்காலங்களை (Tax Holidays) அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய திறைசேரி சுற்றறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
-
முதலீட்டு அளவு: முதலீட்டாளர்கள் 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரை முதலீடு செய்ய வேண்டும்.
-
வேலைவாய்ப்பு: முதலீட்டின் அளவைப் பொறுத்து 100 முதல் 250 வரையான உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சுற்றுலாத்துறை: சுற்றுலா மற்றும் அது சார்ந்த ஏனைய பொழுதுபோக்கு முதலீடுகளுக்கு குறைந்தபட்ச முதலீடு 300 மில்லியன் அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்கப்படும்.
-
வரி விலக்குகள்: வரிச்சலுகைக்காலத்தின் போது நிறுவன வருமான வரியிலிருந்து (CIT) முதலீட்டாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
-
இறக்குமதி சலுகைகள்: திட்ட அமுலாக்கக் காலத்தின் போது மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரி விலக்குகள் வழங்கப்படும்.
எனினும், தனிப்பட்ட பாவனைக்காக அல்லது பயணங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கு எவ்வித வரி விலக்குகளும் வழங்கப்படமாட்டாது என்பது இந்த சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
