தலங்கம, அக்குரெகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார், காலி, அகலிய பகுதியில் உள்ள குட்டியவத்த வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நுஜேகுடா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவிக்கையில், குறித்த வாகனம் கண்டெடுக்கப்பட்ட சமயத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டது.
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோரின் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கார், அகலிய பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்றனர். இதன்போது, வாகனம் தீயில் மூழ்கியிருப்பதை அவர்கள் அவதானித்துள்ளனர்.
இந்த இரட்டைக்கொலையானது, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ‘கரந்தெனிய சுத்த’ என அழைக்கப்படும் ஜயலத் சில்வா என்ற பாதாள உலகக் குழுத் தலைவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த சட்டத்தரணி முன்னதாக ‘கரந்தெனிய சுத்த’வுக்காக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தாரென்றும், பின்னர் அவரது முக்கிய எதிரியான ‘லோகு பதி’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினருக்காகப் பணியாற்றியிருந்தாரென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தன்னைப் பற்றிய தகவல்களை தனது எதிரிக்கு சட்டத்தரணி பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கரந்தெனிய சுத்தவின் சகாக்களால் இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
.
