இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் மின்னணு பயண அனுமதி (ETA) தொடர்பான அறிவிப்புச் செய்திகளை (Approval Notices) மின்னஞ்சல் மூலம் அனுப்புவதில் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் தூதரகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனைச் சரிசெய்ய இலங்கை அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:
-
அனுமதிப் பத்திரம் இன்றி பயணம் செய்யலாம்: ஏற்கனவே ETA-விற்கு விண்ணப்பித்த பயணிகள், அதற்கான உறுதிப்படுத்தல் அறிவிப்பு (Approval Notice) இன்னும் கிடைக்கப் பெறாவிட்டாலும் இலங்கைக்கான தமது பயணத்தைத் தொடர முடியும்.
-
விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு: ETA அனுமதிப் பத்திரத்தை சமர்ப்பிக்காவிட்டாலும் பயணிகளை விமானத்தில் ஏற்ற அனுமதிக்குமாறு (Boarding) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசதிகள்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், அங்குள்ள குடிவரவு அதிகாரிகளினால் ETA சரிபார்ப்பு மற்றும் தேவையான ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த சேவையை மிக விரைவில் வழமைக்குக் கொண்டுவர உழைப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளது.