கணினித் திருட்டு (cyber theft) மூலம் இழந்த பணம் மீட்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருப்பிச் செலுத்த அரசாங்கம் அரசநிதியைப் பயன்படுத்தும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனது கடன் மறுசீரமைப்பு கடமைகளின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை, நிதி அமைச்சின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவிய இணையக் குற்றவாளிகள் (cyber criminals) திருடியதால் இலங்கை அதனை இழந்தது.
நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் (CoPF) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அண்மையில் நடத்திய கூட்டத்தில் விசாரணை செய்தபோது, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனை ஒப்புக்கொண்டார்.
கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் விசாரணையின் போது, இத்தகைய பல பில்லியன் டொலர்பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையகம் (email server) 2019 ஆம் ஆண்டிலிருந்து புதுப்பிக்கப்படாமல் (outdated) பழமையானதாகவே இருந்தது கண்டறியப்பட்டது.
2023 ஆம் ஆண்டில், இந்த அமைப்பை மேம்படுத்துவதற்கான அடிப்படை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், முக்கியமான கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தப்படும் இத்தகைய ஒரு பழமையான அமைப்பு செயல்பாட்டில் இருந்தது குறித்து நிதி அமைச்சின் செயலாளர் விபரங்கள் அறியாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையில், நிதி அமைச்சு இந்த கொடுப்பனவை மேற்கொள்வதற்கான திட்டம் மற்றும் காலக்கெடு குறித்து ஆலோசித்து வருவதாக ஆஸ்திரேலிய தூதரகத்தின் ஒரு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சில மாதங்களில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
