2025 மே 1 அன்று, சிந்துதுர்க் நாட்டின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) வசதி கொண்ட மாவட்டமாக மாறியது. பெருநகரங்களுக்கு அப்பாலும் தொழில்நுட்பம் எவ்வாறு நிர்வாகத்தை மாற்றியமைக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.
பொலிஸ் சேவை மற்றும் சுகாதாரம் முதல் போக்குவரத்து மேலாண்மை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவை விநியோகம் வரை, செயற்கை நுண்ணறிவை நோக்கத்தோடு பயன்படுத்தும்போது அது அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை இம்மாவட்டம் நிரூபித்துள்ளது.
மகாராஷ்டிரா கேடரின் 2019 ஆம் ஆண்டு தொகுதி ஐ.பி.எஸ் அதிகாரியான கிருஷிகேஷ் ராவலே (Krushikesh Rawale), இந்த மாற்றம் வடிவம் பெற்றபோது சிந்துதுர்க்கில் பணியாற்றி வந்தார்.
‘இந்தியன் மாஸ்டர்மைண்ட்ஸ்’ (Indian Masterminds) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது பொறியியல் பின்னணி பொலிஸ் சேவைக்கான தனது அணுகுமுறையை எவ்வாறு வடிவமைத்தது என்பதை ராவலே விளக்கினார். “பொறியியல் ஒரு பகுப்பாய்வு மனதை உருவாக்குகிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு மூலக் காரணம் உண்டு. பொலிஸ் சேவையிலும் கூட, ஒரு குற்றம் நடந்தால், எங்கேனும் ஒரு உடைந்த இணைப்பு இருக்கும்; அதை அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும். அந்தச் சிந்தனை முறை எனக்கு பெரிதும் உதவியுள்ளது,” என்று அவர் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, நிர்வாகமானது எட்டு முக்கிய அரசாங்கத் துறைகளில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டுவருவதற்காக ‘மார்வெல்’ (MARVEL) அமைப்புடன் இணைந்து ‘ஏ.ஐ சிந்துதுர்க் மாதிரியை’ (AI Sindhudurg Model) உருவாக்கியது.
வெறுமனே எதிர்வினையாற்றுவதை விட, பிரச்சனைகளைக் கணித்துத் தடுப்பதே இதன் இலக்காகும். குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை முதல் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்காணிப்பது மற்றும் ‘பயோஅகௌஸ்டிக் எச்சரிக்கைகள்’ (Bioacoustic alerts – உயிரியல் ஒலி எச்சரிக்கைகள்) மூலம் மனித-யானை மோதலைக் குறைப்பது வரை, செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்திலேயே பிணைக்கப்பட்டது.

இத்திட்டம் ‘நிதி ஆயோக்’ (NITI Aayog) அமைப்பைக் கவரும் வகையில் அமைந்ததால், இதை நாடு முழுவதும் செயல்படுத்த முடியுமா என்பதைப் ஆய்வு செய்ய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
தற்போது புனேவில் மண்டலம் 1 இன் பொலிஸ் துணை ஆணையராக (DCP Zone 1) பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ராவலே, கணேஷ் திருவிழாவின் போது ஏறத்தாழ 16 லட்சம் பார்வையாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஏ.ஐ அடிப்படையிலான கூட்ட மேலாண்மையைப் பயன்படுத்தி, அதே சிந்தனையை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
ராவலேவைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் சக்தி வாய்ந்தது, ஆனால் நேர்மையே நிர்வாகத்தை ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கிறது. “நீங்கள் எப்போதும் மக்களிடம் கண்ணியமாகவும் மரியாதையுடனும் பேசலாம். ஆனால் உங்கள் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது,” என்று அவர் கூறுகிறார்.
