GUARDIAN
மத்திய கிழக்கின் மற்றொரு முக்கிய கடல்வழிப் பாதையில் வன்முறை முற்றுகை ஏற்பட்டு, சூயஸ் கால்வாய் மட்டுமே வளைகுடா எண்ணெய்யின் தடையற்ற போக்குவரத்திற்கு திறந்திருக்கும் நிலையில், கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது பெரிய எரிசக்தி நெருக்கடியைத் தவிர்க்க ஆசிய அரசுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு எண்ணெய்யை 90% வரை நம்பியிருக்கும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், செங்கடலின் தெற்கு நுழைவாயிலான பாப் அல்-மண்டேப் நீரிணை வழியாகச் செல்லும் சவூதி அரேபியக் கப்பல்களுக்கு எதிராக ஏமனின் ஹூதிகள் முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து, தங்களது எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆசியாவின் பல நாடுகள் மார்ச் மாதத்தில் ஈரான் மேற்கொண்ட ஹோமுஸ் நீரிணையின் முடக்கத்தால் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றன. இது மத்திய கிழக்கின் குறைந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு பிராந்திய அரசுகளிடையே கடுமையான போட்டியை ஏற்படுத்தியது.
“உலகளாவிய கையிருப்புத் திறனைப் பொறுத்தவரை அவர்கள் கையிருப்பின் கடைசி சொட்டு வரை பயன்படுத்தி வருகின்றனர்… இப்போது அவர்களிடம் மிகக் குறைந்த அளவே கையிருப்பு உள்ளது” என்கிறார் ஆசியா குழுமம் (Asia Group) என்ற ஆய்வமைப்பைச் சேர்ந்த அகமது ஹெலால் (Ahmed Helal).
ஜப்பான் மற்றும் அதன் பக்கத்து நாடுகள் பெட்ரோலிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க பில்லியன் கணக்கில் எரிபொருள் மானியங்களைச் செலவிட்டு வருகின்றன. இது அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ஹூதிகளின் அறிவிப்புக்குப் பிறகு, தென் கொரியா போன்ற சில நாடுகள் எரிபொருள் வரிக்குறைப்பை விரைவாக நீடித்துள்ளன.
அதேவேளையில், இறக்குமதிச் செலவு உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளதுடன், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற பிராந்தியத்தின் பெரிய பொருளாதார நாடுகளின் அரசாங்கங்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
தற்போது, செங்கடல் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் இந்த அழுத்தத்தை மேலும் உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. மார்ச் மாதத்தில், ஹோமுஸ் நீரிணை முடக்கப்பட்டதற்குப் பதிலாக, சவூதி அரேபியா தனது நாட்டின் கிழக்குக் கரையில் உள்ள வளைகுடாவிலிருந்து, செங்கடலில் உள்ள மேற்குக்கரை துறைமுகமான யான்புவுக்கு (Yanbu) எண்ணெய் ஏற்றுமதியை திசைதிருப்பியது. இத்துறைமுகம் தற்போது ரியாத்தின் 70%-க்கும் அதிகமான கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கையாள்கிறது.
இது சவூதி எண்ணெய்யின் மிகப்பெரிய வாடிக்கையாளரான சீனா மற்றும் அதைத் தொடர்ந்து வாங்கும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற பல ஆசிய நாடுகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது.
சில ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுத்திகரிப்பு ஆலைகள், சூயஸ் கால்வாய் வழியாக வடக்கே மத்திய தரைக்கடலுக்கும், பின்னர் ஆப்பிரிக்காவைச் சுற்றியும் சரக்குகளைத் திசைதிருப்புவதன் மூலம் ஹூதிகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்க முற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த நீண்ட சுற்ற வழி பெரும் செலவை ஏற்படுத்துகிறது.
மிகப்பெரிய அளவிலான எண்ணெய் தாங்கிக் கப்பலான VLCC, முழுமையாக சரக்கு ஏற்றப்பட்ட நிலையில் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல முடியாத அளவுக்குப் பெரியது. அதாவது கப்பல்கள் தங்களது எண்ணெய்யில் பாதியை செங்கடலில் இறக்கி, எகிப்தின் சுமத் (Sumed) குழாய் வழியே மத்திய தரைக்கடல் கரைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் கால்வாயைக் கடந்த பிறகு கப்பல்கள் அதை மீண்டும் ஏற்றிக் கொள்ள வேண்டும். இது பயணத்தில் கூடுதல் செலவுகளையும் தளவாடச் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
மத்திய தரைக்கடல் வழியாகவும், ‘நன் நம்பிக்கை முனை’ (Cape of Good Hope) சுற்றியும் எண்ணெய்யைத் திசைதிருப்புவது பெரும்பாலான ஆசிய இறக்குமதியாளர்களின் பயண நேரத்தை இரட்டிப்பாக்கும். இது சரக்கு மற்றும் எரிபொருள் செலவுகளை மேலும் அதிகரிக்கும்.
தற்போதைக்கு, இந்தச் செலவை ஏற்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். ஹூதிகள் கடந்த வாரம் செங்கடலில் இருந்து வெளியேறிய குறைந்தது இரண்டு சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்களை இலக்கு வைத்தனர், மேலும் இந்த வாரம் சவூதி எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தினர். பாப் அல்-மண்டேப் வழியே செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து ஹூதிகளின் அச்சுறுத்தலால் முடங்கியுள்ளது.
“எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் நடத்தை மாற்றம், அவை இந்த அச்சுறுத்தல்களை தீவிரமாகக் கருதுகின்றன என்பதைக் காட்டுகிறது” என்கிறார் சந்தை கண்காணிப்பு அமைப்பான Kpler இன் ஆராய்ச்சி இயக்குநர் மேட் ஸ்மித் (Matt Smith).
காப்பீட்டு நிறுவனங்களும் இதற்கேற்ப செயல்பட்டுள்ளன. போர் அபாயத்திற்கான காப்பீட்டுக் கட்டணங்கள் கடந்த வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பயணத்திற்கான செலவில் நூறாயிரக்கணக்கான டாலர்களைக் கூட்டக்கூடும்.
அமெரிக்க-ஈரான் போரினால் ஏற்கனவே எரிசக்தி அதிர்ச்சியில் இருக்கும் ஆசிய நுகர்வோருக்கு இந்தச் செலவுகள் தவிர்க்க முடியாமல் மாற்றப்படும்.
“தொழில்கள் மூடப்பட வேண்டியிருக்கும். உச்ச நேரங்களில் நுகர்வைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். மேலும் சில தீவிர நிகழ்வுகளில், கடன் தவறியடைக்கும் அபாயம் அதிகரிக்கலாம்” என்கிறார் ஹெலால்.

வெளிப்பட்ட பலவீனம்
மார்ச் மாதத்தில் ஹோமுஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து முடங்கிய பிறகு, ஆசியாவின் பல நாடுகள் இந்த பாதிப்பைக் குறைக்க விரைவான நடவடிக்கைகளை எடுத்தன. நிலக்கரி மின் நிலையங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தன, இலங்கையில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலைமுறை அமல்படுத்தப்பட்டது, வியட்நாமில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போது வளங்களும் பொறுமையும் குறைந்து வருகின்றன.
ஹூதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் தங்களது மூலோபாய எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்பை வலுப்படுத்தத் தூண்டப்பட்டுள்ளன. அதேவேளையில் பிராந்தியம் முழுவதிலும், இந்த நெருக்கடி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாற்றத்தின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
ஆனால் குறுகிய கால தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில், ஆசிய இறக்குமதியாளர்கள் தங்களது தேவைகளுக்காக தொலைதூர நாடுகளை நோக்கிப் பார்ப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்படும் இந்த குழப்பத்தால் ரஷ்யா மீண்டும் பயனடையும் வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2022 இல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு முதன்முறையாக ஜப்பானும் தென் கொரியாவும் ரஷ்ய எண்ணெய்யை வாங்கியதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய விநியோகத் தடைகளை எதிர்கொள்ள சீன சுத்திகரிப்பு ஆலைகள் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்வதை அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆசிய அரசாங்கங்கள் நீண்ட காலமாக புறக்கணித்து வந்த ஒரு உண்மையை இந்தத் தடைகளும் குழப்பங்களும் சுட்டிக்காட்டுகின்றன: அதாவது அவர்களின் எரிசக்தி அமைப்புகள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன.
இந்த நெருக்கடியானது பல அரசாங்கங்களை தங்களது விநியோகச் சங்கிலிகள் மற்றும் மூலோபாயக் கையிருப்பைச் சேமிக்கும் திறனைக் மறுபரிசீலனை செய்ய நிர்பந்திக்கும் என்று ஹெலால் கணிக்கிறார்.
ஆனால் தற்போதைக்கு, அவர்கள் எப்படியாவது எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாத்தே ஆக வேண்டும், ஏனெனில் “அவர்களிடம் பயன்படுத்திப் பார்ப்பதற்குப் போதிய கையிருப்பு எதுவுமில்லை.”