வீட்டின் விலைக்கும் வருமானத்திற்கும் இடையிலான விகிதத்தில் (Home price-to-income ratio) இலங்கை உலகளவில் இரண்டாவது அதிஉயர் இடத்தில் உள்ளதாக ‘விஷுவல் கேபிடலிஸ்ட்’ (Visual Capitalist) அமைப்பின் புதிய தரவரிசை தெரிவித்துள்ளது. இந்தத் தரவரிசையில் 40.8 என்ற விகிதத்துடன் இலங்கை 180ஆவது இடத்தில் உள்ளதுடன், 89.7 என்ற விகிதத்தைக் கொண்ட சிரிய அரபுக் குடியரசுக்கு மாத்திரமே பின்தங்கியுள்ளது.
“தரவரிசையின் மறுமுனையில், சிரியா உலகின் மிக உயர்ந்த வீடு-வருமான விகிதமான 86.7 ஐப் பதிவுசெய்கிறது, அதைத் தொடர்ந்து இலங்கை (40.8) மற்றும் சீனா (34.6) ஆகிய நாடுகள் உள்ளன. தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் உலகின் மிகக் குறைந்த அளவிலான வீடு வாங்கும் வசதி கொண்ட சந்தைகளாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன,” என்று அந்தத் தகவல் வரைபட வெளியீட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் ‘UN-Habitat World Cities Report 2026’ அறிக்கையின் தரவுகளைப் பயன்படுத்தி, சராசரி வீடுகளின் விலையை குடும்பங்களின் ஆண்டு வருமானத்துடன் ஒப்பிட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக ‘விஷுவல் கேபிடலிஸ்ட்’ தெரிவித்துள்ளது.
மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்ட நாடுகளில் சவுதி அரேபியா (3.0) அடங்கும். அதிக வருமானம் மற்றும் அரசின் வீட்டுவசதி மானியங்களுக்குப் பெயர் பெற்ற வளைகுடா நாடுகளில் இது ஒரு பொதுவான நடைமுறையாகும் என்று அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது. “வளைகுடா நாடுகளில், ஒப்பீட்டளவில் அதிக வருமானம் மற்றும் அரசின் ஆதரவு பெற்ற வீட்டுவசதி முயற்சிகள் பல குடிமக்களுக்குச் சொந்தமாக வீடு வாங்குவதை எட்டக்கூடிய தூரத்தில் வைத்திருக்க உதவுகின்றன”.
அமெரிக்கா 4.5 என்ற விகிதத்துடன் உலகின் 7ஆவது மிகக் குறைந்த வீடு-வருமான விகிதத்தைக் கொண்ட நாடாகத் தரவரிசைப்படுத்தப்பட்டு, பிற வளர்ந்த பொருளாதார நாடுகளை விட முன்னணியில் உள்ளது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தை விட, உள்ளூர் வருமானத்துடன் வீட்டின் விலைகள் எவ்வளவு நெருக்கமாகப் பொருந்துகின்றன என்பதில் தான் வீடு வாங்கும் வசதி (Affordability) அடங்கியுள்ளது என்பதை அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது. “அமெரிக்காவில், உயர்ந்து வரும் அடமானக் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் போதிய வீட்டுவசதி விநியோகம் இல்லாமை ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் வீடு வாங்கும் திறனைக் குறைத்துள்ளன. இருப்பினும், சர்வதேச அடிப்படையில் குடும்ப வருமானத்துடன் ஒப்பிடும்போது வீட்டின் மதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன”.
“பல நாடுகளில் வீட்டின் விலைகள் வருமானத்தை விட தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகம் முழுவதிலும் உள்ள சுமார் மூன்று பில்லியன் மக்கள் வீட்டுவசதி சந்தையின் பலன்களைப் பெற முடியாமல் உள்ளனர்” என்று ‘விஷுவல் கேபிடலிஸ்ட்’ குறிப்பிட்டுள்ளது.
இலங்கையைத் தொடர்ந்து சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள 179ஆவது இடம் குறித்து விளக்கிய வெளியீட்டாளர், “சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வீட்டுவசதி சந்தை சற்று மந்தமடைந்த போதிலும், நகரமயமாக்கல் மற்றும் முதலீட்டுத் தேவைகளால் உந்தப்பட்டு பல தசாப்தங்களாக வீடுகளின் மதிப்பு வேகமான வளர்ச்சியடைந்ததால், குடும்ப வருமானத்துடன் ஒப்பிடும்போது வீட்டின் விலைகள் இன்னமும் அதிகமாகவே உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிக விகிதங்களைக் கொண்ட யூரோ மண்டல நாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பு, “பல ஐரோப்பிய நாடுகளும் ஒப்பீட்டளவில் அதிக விகிதங்களைப் பதிவுசெய்கின்றன. போர்த்துக்கல் (12.6), பிரான்ஸ் (11.8), லக்ஸம்பர்க் (11.5) மற்றும் ஜெர்மனி (10.7) ஆகிய அனைத்து நாடுகளும் அமெரிக்காவை (4.5) விட மிக அதிக விகிதத்தைக் கொண்டுள்ளன. இது பொதுவாக அதிக வருமானம் இருந்தபோதிலும் பல வளர்ந்த பொருளாதார நாடுகளில் நிலவும் வீட்டுவசதி விலையேற்ற அழுத்தத்தை பிரதிபலிக்கிறது” என்று மேலும் சேர்த்துக் கொண்டது.
வளர்ந்து வரும் சந்தைகளில் ஈட்டப்படும் குறைந்த வருமானம் இருந்தபோதிலும், அந்தப் பிரிவில் உள்ள சில நாடுகள் வீடுகளுக்கு ஒப்பீட்டளவில் மலிவான விலையைக் கொண்டுள்ளன என்று அது முடிவு செய்தது. “ஊதியத்தை விட விலைகள் வேகமாக உயரும் போது, செல்வந்த பொருளாதாரங்கள் கூட வீடு வாங்குவதற்கு கடினமான இடங்களாக மாறக்கூடும். அதே நேரத்தில் குறைந்த வருமானம் இருந்தபோதிலும் சில வளர்ந்து வரும் சந்தைகள் ஒப்பீட்டளவில் எளிதாக வீடு வாங்கக்கூடிய பிரிவிலேயே நீடிக்கின்றன”.