கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

வடக்கில் கடல் வளம் புறத்தே இந்திய இழுவைப்படகுகளாலும் அகத்தே சட்டவிரோத மீன்பிடி தொழிலாளர்களாலும் வெறுமையாக்கப்படுவதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறைமையை காக்க இயலாத இலங்கை கடற்படையும் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த இயலாத கடற்றொழில் அமைச்சாலும் மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை நுண்நிதி கடன் நிறுவனங்களின் அதீத சுரண்டல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு நியாயமான வங்கிக் கடன்களை அணுகுவதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதுடன், நியாயமான வட்டிக் கடன் வசதிகளை கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்குவது உள்ளிட்ட மாற்று நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களால் 09.10.2026இன்று கொண்டுவரப்பட்ட பிரேரணையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு கௌரவ சமிந்த விஜேசிறி அவர்கள் கொண்டுவந்துள்ள இப்பிரேரணை வரவேற்புக்குரியது.
வறுமையில் இருந்து மீள்வதற்காகப் பெறப்பட்ட கடன், குடும்பங்களை மேலும் வறுமைக்குள் தள்ளுகின்ற நிலைக்கு தீர்வு காணப்படவேண்டும்.
கடன்பெற்றவர்களின் நிதியறிவை மேம்படுத்துவதுடன் அவர்களைக் கடன் பெறத் தள்ளும் வருமானப் பற்றாக்குறையையும் கடன் வழங்கும் மற்றும் அறவிடும் முறைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், 2024 நொவெம்பர் தொடக்கம் 2025 மார்ச்சு வரை இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் 6850 குடும்பங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வின் படி, வடமாகாண மக்களில் 75.3 சதவீதமானோர் பல்பரிமாண வறுமைக்குள் விழும் அபாயமுள்ள நிலையில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது நுண்நிதி கடனால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் அல்ல. ஆனால், வடக்கில் குடும்பங்களின் பொருளாதாரப் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
உணவுத் தேவைக்காக கடன்படுதல், வருமானத் தேவைக்காக சொத்துகளை அடகு வைத்தல் அல்லது விற்றல் போன்றவையும் இந்த ஆய்வின் பாதிப்பு அளவீட்டில் இடம்பெறுகின்றன.
இத்தகைய சூழலில் அதிக வட்டிக் கடனும் இறுக்கமான அறவீடும் ஒரு குடும்பத்தின் உணவு, பிள்ளைகளின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பாதிக்கக்கூடும்.
மீனவர்களும் விவசாயிகளும் தொழில் முனைவோரும் வங்கிக் கடன்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் இறுக்கமான நடைமுறைகள் கூட அவர்களை நுண்நிதி நிறுவனங்களை நாடவைக்கிறது. எனவே, நியாயமான வங்கிக் கடன்களை அணுகுவதில் உள்ள தடைகளையும் அகற்ற வேண்டும்.
வடபுலத்தின் கடல் வளம் புறத்தே இந்திய இழுவைப்படகுகளாலும் அகத்தே சட்டவிரோத மீன்பிடி தொழிலாளர்களாலும் வெறுமையாக்கப்படுகிறது. இறைமையை காக்க இயலாத இலங்கை கடற்படையும் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த இயலாத கடற்றொழில் அமைச்சாலும் எங்கள் மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகிறது.
வன்னியின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி, வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 400 தொழில் முனைவோரிடம் மேற்கொள்ளப்பட்ட மற்றோர் ஆய்வு, நிதியறிவு மேம்படுவதற்கும் கடன் பொறியில் சிக்கும் அபாயம் குறைவதற்கும் தொடர்பிருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
எனவே, தமிழ் மொழியில் நடைமுறை நிதியறிவுப் பயிற்சியும் கடன் ஆலோசனைக்குரிய தேவைப்பாடும் தொழில் முனைவோருக்கும் எளிய மக்களுக்குமான தேவையாகிறது. மக்களுக்கு நிதியறிவு குறைவாக இருப்பதைப் பயன்படுத்தி, கடன் வழங்கும் நிறுவனங்கள் அவர்களைச் சுரண்டுவதை மேலும் அனுமதிக்க முடியாது. கடன் நிபந்தனைகளைத் தெளிவாக விளக்குவதும், நியாயமான முறையில் கடன் வழங்கி அறவிடுவதும் அந்நிறுவனங்களின் பொறுப்பு.
எனவே, மாவட்டவாரியாக இவ்வாறாக, நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து பணம்பெற்று பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்ந்த விபரங்கள் துல்லியமாகப் பெறப்படுவதோடு அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களை அறிக்கைப்படுத்துவதும் தொடர்நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.
அதீத சுரண்டல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு நியாயமான வட்டிக் கடன் வசதிகளை கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்கல் உள்ளிட்ட மாற்று நடைமுறைகளும் சமநேரத்தில் வலுவூட்டப்படக்கூடியதாக மேற்படி வேலைத்திட்டம் அமையவேண்டும் – என்றார்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்