நீதவானால் பரிசீலிக்கப்படவுள்ள பல அறிக்கைகளில் பேராசிரியர் சோமதேவாவின் அறிக்கையும் ஒன்று
பேராசிரியர் ராஜ்சோமதேவா ஒரு தடயவியல் மருத்துவ நிபுணர் அல்ல அவர் சட்டமருத்துவ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ள நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார அவர் தயாரித்துள்ளது ஒரு தொல்லியல் அறிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்

பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்த தொல்லியல் அறிக்கை தொடர்பாகப் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து, செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளைச் சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தல் வழங்கியுள்ளது.
இந்த அறிக்கை ஒரு சட்ட மருத்துவ மதிப்பீடு அல்ல என்றும், நடந்து வரும் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏனைய தடயவியல் மற்றும் புலனாய்வு அறிக்கைகளுடன் இணைந்தே இது பரிசீலிக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில், ஏறக்குறைய 574 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாண நீதவான், பல்வேறு தரப்பினரின் சட்டப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி (JMO) கலாநிதி பிரணவன் செல்லையா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மற்றும் சம்பவ இட அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையில் இந்த அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்தச் செயல்முறை சட்ட மற்றும் தடயவியல் அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காணாமல் போனோர் அலுவலகமும் (OMP), காணாமல் போனோர் அலுவலகச் சட்டத்தின் 12(d) பிரிவின் கீழ் அவதானியாகச் செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சோமதேவாவின் அறிக்கை தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாணயக்கார, சோமதேவா ஒரு தடயவியல் மருத்துவ நிபுணர் அல்ல என்றும், அவர் சட்ட மருத்துவ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
“உங்கள் கேள்வியில், ‘சட்ட மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கான தொழில்முறை தகுதிகள் ராஜ் சோமதேவாவுக்கு உள்ளதா?’ எனக் கேட்டிருந்தீர்கள். இல்லை, அவரிடம் அத்தகைய தகுதிகள் இல்லை; அவர் அத்தகைய அறிக்கையையும் ஒருபோதும் வெளியிடவில்லை. அதனால்தான் நீங்களே உங்களைத் தவறாக வழிநடத்திக் கொண்டீர்கள் , நான் உங்களுக்கு விளக்குகிறேன். அவர் ஒருபோதும் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை; அவர் ஒரு தொல்லியல் அறிக்கையையே வைத்துள்ளார். பேராசிரியர் ராஜ் சோமதேவா தயாரித்துச் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒரு தடயவியல் தொல்லியல் அறிக்கையாகும் — மனித எச்சங்கள் எங்கே, எப்படி, எந்தச் சூழ்நிலைகளில் புதைக்கப்பட்டன என்பதை ஆராய்வதே அது. இது சட்ட மருத்துவ அறிக்கை அல்ல. மரணத்திற்கான காரணம் மற்றும் விதம் ஆகியவை நீதித்துறை நடவடிக்கைகளுக்கு ஏற்ப உரிய காலத்தில் சட்ட மருத்துவப் புலனாய்வுகள் மூலம் ஆராயப்படும்,” என அவர் கூறினார்.
மனித எச்சங்கள் தொடர்பாகச் சட்டப்பூர்வ தடயவியல் அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி கலாநிதி பிரணவன் மற்றும் அவரது குழுவினருக்கு உத்தரவிட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக நாணயக்கார விளக்கினார்.
நீதவானால் பரிசீலிக்கப்படவுள்ள பல அறிக்கைகளில் பேராசிரியர் சோமதேவாவின் அறிக்கையும் ஒன்று மட்டுமே என அவர் வலியுறுத்தினார்.
“மக்கள் செய்யும் தவறு என்னவென்றால், நீதவான் பார்வையிடும் அறிக்கைகளில் ராஜ் சோமதேவாவின் அறிக்கையும் ஒன்று மட்டுமே. ஒரேயொரு அறிக்கையின் அடிப்படையில் நீதவான் உத்தரவொன்றைப் பிறப்பிக்க முடியாது; அவர் அனைத்து அறிக்கைகளையும், ஏனைய புலனாய்வு அறிக்கைகளையும் பார்வையிடுவார். ராஜ் சோமதேவாவின் அறிக்கை மட்டுமே ஒரே அறிக்கை என நினைத்துக் கேள்விகள் குழப்பப்பட்டுள்ளன; உண்மை நிலை அதுவல்ல,” என அவர் கூறினார்.
இந்தத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சமூகத்திற்கு எதிராகத் திசைதிருப்பப்பட்டவை என்ற கருத்துகளை நிராகரித்த நாணயக்கார, நீதித்துறை நடவடிக்கைகளுக்கு விஞ்ஞானபூர்வமான தகவல்களை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஒரு தொழில்முறை மதிப்பீடாக இந்த அறிக்கையை வர்ணித்தார்.
காணாமல் போனோரின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, சோமதேவாவின் அறிக்கையை வழக்கு ஆவணத்தில் சேர்க்குமாறும், ஆனால் அதனடிப்படையில் சுயாதீனமாகச் செயற்பட வேண்டாம் என்றும் நீதவான் உத்தரவிட்டிருந்ததாக அவர் கூறினார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீன சர்வதேச விசாரணையொன்றை நிறுவுவதற்கோ அல்லது அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கோ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இணங்கவில்லை என்றும், நீதிமன்றத்தின் முன்னிலையில் எந்தவொரு தரப்பினரும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்றத்தால் அடையாளம் காணப்படும் தேவைகளுக்கு ஏற்ப, குறிப்பாக டி.என்.ஏ (DNA) பகுப்பாய்வு, மனித எச்சங்களை அடையாளம் காணுதல் மற்றும் மேலதிக தடயவியல் புலனாய்வுகளுக்காகச் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் தடயவியல் உதவிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
“நாங்கள் உண்மையைக் கண்டறிய விரும்புகிறோம், எங்களுக்கு நீதி வேண்டும். அது முறையான விஞ்ஞானபூர்வ ஆதாரங்களின் அடிப்படையிலான புலனாய்வு மூலமாகவே செய்யப்பட வேண்டும். இனம், மதம், சாதி ஆகியவை இதற்குப் பொருந்தாது; அரசாங்கம் அந்த வழியில் சிந்திப்பதில்லை,” என நாணயக்கார கூறினார்.

செம்மணி விசாரணைகளை அரசியலாக்க வேண்டாம் எனப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர், உண்மையை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை வழங்கவும் விஞ்ஞானபூர்வமான மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான செயல்முறையை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகக் கூறினார்.
“போதும், இது போதும்; அரசியல் ஆதாயத்திற்காக இனவாத பதட்டங்கள் பயன்படுத்தப்படுவது பழைய பாணியான விடயம். , நீங்கள் அவ்வாறு செய்வதாக நான் கூறவில்லை. ஆனால், நீதியைப் பெறுவதற்கும், இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கும் இதனை விஞ்ஞானபூர்வமாகவும் முறையாகவும் செய்வோம்.”