முன்மொழியப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் (Protection of Occupants Bill), நல்லெண்ணத்துடன் கொண்டுவரப்பட்டாலும், அது தற்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்பட்டால் பாரிய சட்ட மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.
இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அலி சப்ரி, துன்புறுத்தல் மற்றும் சட்டவிரோத வெளியேற்றங்களைத் தடுப்பது ஒரு நியாயமான பொது நோக்கமாகும் என்றாலும், இந்த வரைவுச் சட்டம் இலங்கையின் வாடகைச் சந்தையைச் சீர்குலைக்கவும், வாடகைக் குடியிருப்பாளர்களுக்கே தீங்கு விளைவிக்கவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1972 ஆம் ஆண்டின் வாடகைச் சட்டம் (Rent Act) போன்ற கடுமையான சட்ட முறைகளிலிருந்து இலங்கை விலகி வந்துள்ளதோடு, சமீபத்தில்தான் ‘குத்தகைக்கு வழங்கப்பட்ட வளாகங்களை மீண்டும் கையகப்படுத்துதல் சட்டம்’ (Act No. 1 of 2023) மூலம் சமநிலையான சட்டக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்தச் சீர்திருத்தங்களைத் தலைகீழாக மாற்றும் எந்தவொரு சட்ட நகர்வும் மிகவும் கவனமாக அணுகப்பட வேண்டும் என அவர் எச்சரித்தார்.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தினால் எழக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை அலி சப்ரி கோடிட்டுக் காட்டினார். குறிப்பாக, வாடகையாளர்கள் வாடகைப்பணம், மின்சாரம்/நீர் கட்டணங்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு (Condominium) மேலாண்மை கட்டணங்களைச் செலுத்தத் தவறினாலும், நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும்போது உரிமையாளர்கள் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் வழங்கவும், குடியிருப்பாளர்களைத் தொடர்ந்து பராமரிக்கவும் புதிய சட்டத்தின் கீழ் நிர்ப்பந்திக்கப்படலாம்.
“இது வாடகையைச் செலுத்தாத குடியிருப்பாளர்களுக்குச் சொத்து உரிமையாளர்கள் நிதியுதவி செய்வதைப் போன்றதாகும்,” என்று கூறிய அவர், இத்தகைய விதிகள் முறையான குடியிருப்பை விட, சட்டமீறலைப் பாதுகாப்பதாக அமையும் என்றார்.
வாடகையாளர்களின் பொறுப்புணர்வு இல்லாமல் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என்று வலியுறுத்திய அவர், பணம் செலுத்தத் தவறினாலும் தடையற்ற சட்டப் பாதுகாப்பு வழங்குவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.
மேலும், இந்தச் சட்டமூலம் 2023 ஆம் ஆண்டின் முதலாம் இலக்கச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்பைப் பாதிப்பதோடு, சட்டச் சிக்கல்களையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பொருளாதார தாக்கம் குறித்து எச்சரித்த அவர், நில உரிமையாளர்கள் தமது சொத்துக்களை வாடகைச் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளக்கூடும், அதிக முன்பணத்தைக் கோரக்கூடும் அல்லது முறைசாரா குத்தகை ஒப்பந்தங்களுக்கு மாறக்கூடும் என்றார். இது இறுதியில் வீட்டு விநியோகத்தைக் குறைத்து, வாடகை விலைகளை உயர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மாற்றாக, புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, தற்போதுள்ள 2023 ஆம் ஆண்டின் சட்டத்தில் இலக்கு வைக்கப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அலி சப்ரி பரிந்துரைத்தார். வாடகை செலுத்துதல், பயன்பாட்டு கட்டணங்களைத் தீர்த்தல் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே வாடகையாளர் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.
“பணம் செலுத்தாவிடில், பாதுகாப்பு இல்லை” (No payment, no protection) என்று அவர் வாதிட்டார். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் வாடகைச் சந்தையின் மீதான நம்பிக்கையைப் பேணுவதன் மூலம் வாடகையாளர் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றார்.
சீர்திருத்தம் என்ற போர்வையில் காலாவதியான சட்ட முறைகளுக்கு இலங்கை மீண்டும் திரும்ப முடியாது என்று எச்சரித்த அவர், முன்மொழியப்பட்ட சட்டத்தை மறுபரிசீலனை செய்து செம்மைப்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.