2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து, 2025 ஆம் ஆண்டை தனது சிறந்த செயல்பாட்டு ஆண்டாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (JIA) அடையாளப்படுத்தியுள்ளது. இவ்வாண்டில் 53,443 சர்வதேச பயணிகள் பரிமாற்றங்களையும், 1,138 சர்வதேச விமான இயக்கங்களையும் அது பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு விமான நிலையத்திற்கு பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கற்களைக் கொண்டிருந்தது. மலேசியா, ஹைதராபாத் மற்றும் இந்தியாவின் சென்னை ஆகிய இடங்களிலிருந்து மூன்று சர்வதேச சார்ட்டர் (Charter) விமானங்களை JIA வரவேற்றதோடு, ஹைதராபாத்திலிருந்து முதலாவது சர்வதேச மருத்துவ அவசர சிகிச்சை (MEDEVAC) சார்ட்டர் விமானத்தையும் இயக்கியது. மேலும், விமான நிலையத்தின் முனைய விரிவாக்கத் திட்டமானது (Terminal Expansion Project) அடிக்கல் நாட்டு விழாவுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
கூடுதலாக, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, அமெரிக்க விமானப்படை உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் பங்காளிகளால் இயக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏந்திய மனிதாபிமான விமானப் பயணங்களுக்கும் JIA வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்த விமான நிலையம் பிராந்திய விமான இணைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து, வடக்கு இலங்கையின் சுற்றுலாத்துறையையும் மேம்படுத்தி வருகிறது.