சிறிது நேரத்திற்கு முன்பு, வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தப் போர் நடவடிக்கைகள் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று தெரிவித்தார் – இது கடந்த வாரம் தாக்குதல்கள் தொடங்கிய உடனேயே அதிபர் டிரம்ப் கூறியதைப் போன்றது.
இருப்பினும், பென்டகன் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), போர் முடிவடைவதற்கான எந்தவொரு காலக்கெடுவையும் வழங்க மறுத்துவிட்டனர். அமெரிக்க இராணுவம் தனது பல்வேறு நோக்கங்களை அடைவதற்கு அதிபர் அவசியமெனக் கருதினால், இந்தத் தாக்குதல்கள் இன்னும் நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இன்று அதிகாலை, டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், ஈரானிடமிருந்து “நிபந்தனையற்ற சரணடைதலை” (unconditional surrender) எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார் – ஆனால் ஈரானிய அரசாங்கம் இதுவரை, குறைந்தபட்சம் பகிரங்கமாக, அத்தகைய கோரிக்கையை பரிசீலிக்கத் தயாராக இல்லை என்றே தெரிகிறது.
இவ்வாறான மாறும் காலக்கெடு மற்றும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், அமெரிக்க நிர்வாகத்தின் “போருக்குப் பிந்தைய” (day after) திட்டமிடல் குறித்து அதிக கேள்விகளை எழுப்புகின்றன – அதாவது வெற்றியை அவர்கள் எதன் அடிப்படையில் மதிப்பிடுவார்கள் மற்றும் இந்தப் போர் நடவடிக்கை எவ்வாறு முன்னேறும் என்பது குறித்த கேள்விகள் எழுகின்றன.
போர் நீண்ட காலம் தொடர்ந்தால், டிரம்ப்பிற்கு அரசியல் ரீதியாகப் பல சிக்கல்கள் ஏற்படும். ஏனெனில், 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா சிக்கியிருந்த “முடிவில்லாப் போர்களை” (forever wars) முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தே அவர் தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார்.