லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளிகள் தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

தஞ்சமடைந்துள்ள டஜன் கணக்கான குடும்பங்கள் தங்கியிருக்கும் ஒரு பள்ளியில், இன்று மாலை தங்குவதற்கு இடம் இருப்பதாகக் கூறப்பட்டதும் ஒரு தாயும் மகளும் புன்னகைத்தனர். “நாங்கள் எங்களால் முடிந்தவரை வாழ்க்கையைத் தொடர முயற்சிக்கிறோம்… இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் இது எங்கள் கைகளில் இல்லை,” என்று பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான தாஹியேவைச் (Dahieh) சேர்ந்த 45 வயதான ஹமீதா என்னிடம் கூறினார். “இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கடவுளுக்குத்தான் தெரியும். ஒருவேளை கடந்த போரை விட நீண்ட காலம் நீடிக்கலாம்,” என்றார் அவர்.
தெற்கு நகரமான டயரிலிருந்து (Tyre) தப்பி வந்த மற்றொரு பெண், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்த கடந்த போரின் போதும் இங்கேயே தங்கியிருந்ததாகக் கூறினார். “அதன் காரணமாகவே இந்த முறையும் உடனடியாக இங்கு வர வேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்தது,” என்று 65 வயதான ஹாலா அல்-செயின் கூறினார். “நிச்சயமாக, எல்லோரும் பயப்படுகிறார்கள், ஆனால் நாம் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் – நம் குழந்தைகளுக்காக நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது.”
படக்குறிப்பு:
55 வயதான பாசிமா, தங்குமிடமாகச் செயல்படும் ஒரு பள்ளிக்குத் தனது செல்லப் பறவையான ‘புல்புல்’ மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பையுடன் வந்திருந்தார்.
நகரத்திலுள்ள மற்றொரு பள்ளியில், இன்று மாலை தன்னார்வலர்கள் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக மெத்தைகளைத் தயார் செய்தனர். திங்கள்கிழமை தாஹியேவில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பி வந்த 55 வயதான பாசிமாவும் அங்கு தங்கியிருந்தவர்களில் ஒருவர். அவர் தனது செல்லப் பறவையான புல்புல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பையைத் தன்னுடன் கொண்டு வந்திருந்தார்.
“நாங்கள் உண்மையிலேயே நிலைகுலைந்து போயுள்ளோம்… இது எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது, நாங்கள் சோர்வடைகிறோம், ஆனால் இதுதான் எங்கள் விதி. இறுதியில் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.