வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தை நிறைவு செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), சிரேஷ்ட அதிகாரிகளுடன் தான் நடத்திய பெரும்பாலான கலந்துரையாடல்கள், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகக் கப்பல்களைச் செலுத்துவதற்கான “நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள்” குறித்தே அமைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் எரிவாயு மற்றும் எண்ணெய்த் தேவையில் 20% பொதுவாக இந்த முக்கிய நீர்வழிப் பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது. இருப்பினும், அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், அந்தப் பாதையூடான போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.
“இந்த மோதல் ஒரு தலைமுறைக்கே எங்களை வரையறுக்கப் போகிறது. இதற்கு நாங்கள் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும், பதிலளிப்போம்,” என்று கூறிய ஸ்டார்மர், வளைகுடா நாட்டுத் தலைவர்களுடன் “கூட்டுத் தற்காப்பு” (collective self-defence) குறித்து விவாதித்ததாகவும் விளக்கினார்.
வியாழக்கிழமை இரவு, ஸ்டார்மர் டொனால்ட் ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது தற்போதைய போர்நிறுத்தம் குறித்தும், ஹார்முஸ் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான “நடைமுறைத் திட்டம்” குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக டவுனிங் ஸ்ட்ரீட் (Downing Street) தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தை நோக்கும்போது, தற்போதைய போர்நிறுத்தம் “பலவீனமானது” என்பதை ஏற்றுக்கொண்ட பிரதமர், பிராந்தியத்தில் எட்டப்படும் எந்தவொரு நீண்டகால அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்திற்கு எவ்விதக் கட்டணங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இருக்க முடியாது என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.