இந்தியாவின் சீனி ஏற்றுமதித் தடை மற்றும் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது ஆகியவற்றின் காரணமாக, இலங்கையில் கடுமையான சீனி விநியோகத் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று எச்சரித்துள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பால்மா உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மே 15 முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா எடுத்துள்ள திடீர் முடிவை அடுத்து, பிரேசில், தாய்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து சீனியை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளை இறக்குமதியாளர்கள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சீனி இறக்குமதியை பெருமளவில் நம்பியிருந்த இலங்கை, வரவிருக்கும் மாதங்களில் ஏற்படக்கூடிய விலை உயர்வு மற்றும் சாத்தியமான தட்டுப்பாடு குறித்த அச்சங்களுக்கு மத்தியில், புதிய விநியோகஸ்தர்களைத் தேட வேண்டிய அவசர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, பிரேசிலில் இருந்து சீனி இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் கட்டளைகள் (Orders) ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், நீண்ட கடல் வழித்தடங்கள் மற்றும் விநியோகத் (Logistical) தாமதங்கள் காரணமாக, இந்த சரக்குகள் இலங்கையை வந்தடைவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சீனி (Refined sugar) ஏற்றுமதிக்கு இந்தியா எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று குறிப்பிட்ட பேச்சாளர், ஆனால் சுத்திகரிக்கப்பட்ட சீனியின் விலை சாதாரண சீனியை விட கணிசமாக அதிகம் என்பதால், இது ஏற்கனவே வாழ்க்கைச் செலவு உயர்வால பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
ரூபாயின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பால்மா, பருப்பு, ரின் மீன் (Canned fish), சில அரிசி வகைகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் பலவீனமடைந்தால், சீனி மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான புதிய கொள்முதல் கட்டளைகளை இடுவதற்குத் தேவையான வெளிநாட்டு நாணயத்தைப் (Foreign exchange) பெற்றுக்கொள்வதில் இறக்குமதியாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பேச்சாளர் மேலும் எச்சரித்துள்ளார்.
இந்த வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீனி இருப்பு (Stocks) தற்போது நாட்டில் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலைமையானது அடுத்த சில வாரங்களில் சீனியின் விலை அதிகரிப்பதற்கும், பல முக்கிய இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வதற்கும் வழிவகுக்கும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளதால், நாட்டில் மீண்டும் ஒரு உணவுப் பணவீக்க அலை (Food inflation) ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
