நாட்டின் தனியார் துறையில் தற்போது 4 இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், தகுதியான மற்றும் சாதாரண தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக உள்நாட்டுத் தொழில்துறையினர் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் இன்று (30) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, பல துறைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கட்டுமானத்துறை, டைல்ஸ் (Tiles) மற்றும் அதனுடன் தொடர்புடைய உதிரிப்பாகங்கள் தயாரிப்பு, காலணிகள், தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் வாகனத் துறை (Automobile Sector) உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளில் இந்தத் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களை இந்தத் தொழில்துறைகளில் முறையாக இணைத்துக்கொள்வதற்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்துமாறு அமைச்சர் ஹந்துன்னெத்தி அதிகாரிகளுக்கு இதன்போது உத்தரவிட்டார்
