திங்கட்கிழமை (20) முதல் முட்டையின் விலைகள் உயர்த்தப்படும் என்றும், அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் சில்லறை விலை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 42 ரூபாயாகவும் அதிகரிக்கும் என்றும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், இந்த விலை உயர்விற்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
சோள இறக்குமதி முற்றாக இடைநிறுத்தப்பட்டமையினால் கோழித் தீவனத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளை உள்ளூர் சோள உற்பத்தி முட்டைத் தொழிற்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ரத்நாயக்கவின் கூற்றுப்படி, உற்பத்தியாளர்கள் அரிசி உள்ளிட்ட மாற்றுத் தீவனப் பொருட்களைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும், இது கோழிகளின் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் மோசமாகப் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சில நேர்மையற்ற வர்த்தகர்கள் விலங்குத் தீவனத்தில் இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதால், பெருமளவிலான கோழிகள் இறந்து பண்ணையாளர்களுக்குக் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
