-
திட்டத் தாமதங்கள் கொழும்பின் போட்டித் தன்மையைப் பலவீனப்படுத்தக்கூடும் என பாராளுமன்ற மேற்பார்வைக் குழு எச்சரிக்கை
-
இந்தியாவின் விழிஞ்சம் (Vizhinjam) துறைமுக விரிவாக்கம், MSC நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஹம்பாந்தோட்டை திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் தாக்கம் குறித்த மதிப்பீட்டைக் கோரியுள்ளது
-
கொள்முதல் (Procurement) தாமதங்கள் குறித்து தணிக்கை செய்யவும், திட்டத் பின்னடைவுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் அழைப்பு
இந்தியாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுக மேம்பாடு மற்றும் பிராந்திய துறைமுக திறன் விரிவாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், கொழும்பு துறைமுகத்தை விரிவாக்குவதில் ஏற்படும் தாமதங்கள் இலங்கையின் போட்டித் தன்மையை இழக்கச் செய்யும் என்ற கவலையை பாராளுமன்ற மேற்பார்வைக் குழு எழுப்பியுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) செயல்பாடுகள், நிதிச் செயல்பாடு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மதிப்பீட்டின் போது, உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் (SOC) இந்தக் கவலைகள் முன்வைக்கப்பட்டன.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகம், சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளுக்குச் சேவை செய்யும் ஆழ்கடல் மறுஏற்றுமதி (Transshipment) மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய கடல்சார் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள இத்துறைமுகம், 24 மீட்டர் இயற்கை ஆழத்தைக் கொண்டுள்ளதோடு, பிரமாண்ட கொள்கலன் கப்பல்களைக் கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு மறுஏற்றுமதி வசதிகளை இந்தியா சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைக்கிறது.
மறுஏற்றுமதி வணிகமே கொழும்பு துறைமுகத்தின் பிரதான ஜீவநாடியாகும். மேலும் இது இலங்கையின் மிக முக்கிய கடல்சார் வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி ஆதாரங்களில் ஒன்றாகும். கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளுதலில் சுமார் 84.5% மறுஏற்றுமதி சரக்குகளைக் கொண்டிருப்பதுடன், இதில் பெரும்பகுதி இந்தியாவுடன் தொடர்புடையதாகும்.
போட்டியாளரான பிராந்திய துறைமுகங்களுக்கு, குறிப்பாக இந்தியக் கடலோரங்களில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் துறைமுகங்களுக்கு மறுஏற்றுமதி வர்த்தகம் மாறுவது, பிராந்தியத்தின் முதன்மை மையமாக கொழும்பின் பங்கை பாதிப்பதுடன், துறைமுக வருவாய், தளவாடச் சேவைகள் (logistics) மற்றும் இலங்கையின் பரந்த பொருளாதாரத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகத்தின் அதிவேக விரிவாக்கம், இந்திய மறுஏற்றுமதி மையத்தில் ‘மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி’ (MSC) நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் திறனை விரிவாக்கும் திட்டங்கள் உட்பட கொழும்பு துறைமுகம் எதிர்கொள்ளும் போட்டி அழுத்தங்கள் குறித்து துறைமுக அதிகாரசபை அதிகாரிகளிடம் இக்குழு விளக்கங்களைக் கோரியது.
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள், கொள்முதல் சிக்கல்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்படும் நிதி இழப்புகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, கொழும்பு துறைமுகத்தின் கையாளுதல் திறனை அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அண்டை நாட்டுத் துறைமுகங்கள் தொடர்ந்து திறனை விரிவுபடுத்தி கப்பல் நிறுவனங்களை ஈர்த்து வரும் நிலையில், இத்தகைய நீடித்த தாமதங்கள் பிராந்திய கடல்சார் துறையில் இலங்கையின் போட்டித் தன்மையைப் பலவீனப்படுத்தும் என்று குழு சுட்டிக்காட்டியது.
திட்டத் தாமதங்களுக்கான காரணங்களைக் கண்டறியவும், அதற்குப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காணவும் விரிவான தணிக்கை செய்யப்பட வேண்டும் எனக் கோரிய அக்குழு, எதிர்காலத்தில் இதுபோன்ற பின்னடைவுகளைத் தவிர்க்க வலுவான கொள்முதல் மற்றும் திட்ட மேலாண்மை முறைகளை மேற்கொள்ள வலியுறுத்தியது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிதிச் செயல்பாடுகளை ஆய்வு செய்த குழு, அதன் இலாபத்தை நிலைநிறுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது (நிதி புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை).
இக்குழுவினால் முன்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும், அதிகாரசபையின் 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை குறித்தும் விவாதங்கள் அமைந்தன.
மேலும், ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் காங்கேசன்துறை உள்ளிட்ட பிராந்திய துறைமுகங்களின் அபிவிருத்தி, ஆதரவு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் துறைமுக அபிவிருத்தித் திட்டங்களில் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் உறுப்பினர்கள் ஆராய்ந்தனர்.
கூட்டத்தின் முடிவில், மூலோபாய துறைமுகத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துதல், வலுவான நிறுவனப் பொறுப்புக்கூறல் மற்றும் துறைமுக அதிகாரசபையின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நீண்டகால இலாபத்தை மேம்படுத்த அதிக வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்குக் குழு அழைப்பு விடுத்தது.
சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, தனுஷ்க ரங்கநாத் மற்றும் சாந்த பத்ம குமார ஆகியோருடன் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகாரசபையின் தலைவர், மேலாண்மை இயக்குநர் மற்றும் இதர அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கொழும்பு துறைமுகம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது கொள்கலன் கையாளுதல் திறனை 15 மில்லியன் TEU (Twenty-Foot Equivalent Units) ஆக இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிராந்திய போட்டித் துறைமுகங்கள் முதலீடு மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் மூலம் விரிவாக்கப்பட்டு வருவதால், புவியியல் சாதகமான அமைவிடம் மட்டுமே தெற்காசியாவின் முன்னணி மறுஏற்றுமதி மையமாக கொழும்பின் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளப் போதுமானதாக இருக்காது என இலங்கை மத்திய வங்கி (CBSL) எச்சரித்துள்ளது.
“இலங்கைத் துறைமுகங்கள் பிராந்தியத்தில் முன்னணி மறுஏற்றுமதி மையமாகத் தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, வெறும் புவியியல் நன்மையை மட்டுமே நம்பியிருப்பது இனி போதுமானதாக இருக்காது” என்று மத்திய வங்கி தனது சமீபத்திய உள்கட்டமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
