தீபாவளி பண்டிகை என்றாலே வேலைக்கு செல்பவர்களுக்கு முதலில் தோன்றக்கூடிய ஒரு விஷயம் போனஸ். .தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும்இ சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வித்தியாசமான பரிசுகளையும் வழங்கி உற்சாகப்படுத்தும். அந்த வகையில் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வித்தியாசமான தீபாவளி பரிசுகளை வழங்கி டிரெண்டாகியுள்ளன.
இந்தியாவை சேர்ந்த Kohler என்ற நிறுவனம் பாத்ரூமில் பயன்படுத்தும் வாஷ்பேஷன் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தன்னுடைய தீபாவளி பரிசு மூலம் ஊழியர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு பெரிய அட்டை பெட்டி நிறைய பரிசுகளை அள்ளி வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் இந்த பெட்டி வழங்கப்பட்டுள்ளது. இதனை தூக்க முடியாமல் தாங்கள் தூக்கி செல்லும் வீடியோக்களை ஊழியர்கள் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த பெரிய அட்டை பெட்டிக்குள் என்னென்ன இருக்கிறது என்பதற்கான அன்பாக்ஸிங் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் இதில் 20 கிராம் எடை கொண்ட தூய்மையான வெள்ளி கட்டி வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி ஒரு ஏர் ஃபிரையர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் காஃபி மெஷின் செம்பு விளக்கு இனிப்புகள் பாதாம் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் ஆகியவை இந்த பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதனை சமூகவலைதளங்களில் டிரெண்டாக்கியுள்ள ஊழியர்கள் இன்னமும் சோன் பப்டியை பரிசாக வழங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறீர்களா? உடனே அந்த வேலையை ராஜினாமா செய்யுங்கள் என கூறியுள்ளனர்.
நெட்டிசன்கள் பலரும் இந்த நிறுவனத்தை பாராட்டியுள்ளதோடு இங்கே எப்படி வேலைக்கு சேர்வது என வினவி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு தான் info edgeஎன்ற நிறுவனம் ஊழியர்களுக்கு விஐபி சூட்கேஸ் வழங்கி உற்சாகப்படுத்தியது.
Naukri போன்ற தளங்களை நடத்தி வரக்கூடிய info edgeநிறுவனம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஒவ்வொரு ஊழியருக்கும் விஐபி சூட்கேஸ் மற்றும் ஒரு பெட்டி நிறைய தின்பண்டங்களும் விளக்குகளும் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை பல்வேறு ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு இதே நிறுவனம் ஊழியர்களுக்கு ஏர் ஃபிரையரை பரிசாக வழங்கியது. இந்த முறை விஐபி சூட்கேஸ்களை பரிசாக கொடுத்திருக்கிறது. பல ஊழியர்களும் இந்த தீபாவளி பரிசினை எதிர்பார்க்கவில்லை என மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதே போல மற்றொரு நிறுவன ஊழியர்களும் தங்களுக்கு கிடைத்த ஆடம்பர தீபாவளி பரிசுகளை ரீல்ஸ்களாக பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் ஒரு புறம் ஊழியர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் மறுபுறம் எந்த ஒரு போனஸும் பரிசும் கிடைக்காத ஊழியர்களை புலம்ப வைத்துள்ளது.
சில ஊழியர்கள் எங்கள் நிறுவனம் தீபாவளி வாழ்த்து என மின்னஞ்சல் மட்டுமே அனுப்பியது என ஒரு சாரார் கூறுகின்றனர். சிலர் எங்கள் நிறுவனம் பணிநீக்கத்தை பரிசாக தந்துள்ளது என கூறியுள்ளனர். சிலர் இது போன்ற நிறுவனங்களில் எப்படி வேலைக்கு சேர்வது என கேட்டு வருகின்றனர்.
