கறுப்பு ஜுலை குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவைநியமிக்குமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்தமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்
அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது
1983ம் ஆண்டு கறுப்புஜூலை கலவரம் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளமை ஆழ்ந்த கவலையை அளிக்கும் விடயம்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதற்கான வேண்டுகோளை விடுத்தார்.
கறுப்புஜூலையில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான காரணங்களை சிங்கள மக்களின் தலைகள் மீது மாத்திரம் சுமத்த முடியாது என நான் வலியுறுத்தினேன்.
பல சிங்கள மக்கள் கலவரத்தின் போது துணிச்சலுடன் தமிழ் மக்களை பாதுகாத்தார்கள்.
எனினும் இதனை திட்டமிட்டு முன்னெடுத்தவர்களையும் இதற்கு அரசியல் ஆதரவை வழங்கியவர்களையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்.அவர்களில் சிலர் இன்றும் எங்களுடன் உயிருடன் இருக்கலாம்.
இலங்கை ஏற்கனவே இது குறித்த ஆணைக்குழுக்களையும்,விசாரணைகளையும் அறிக்கைகளையும் மன்னிப்புகளையும் பார்த்துள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது உண்மையில் சுயாதீன விசாரணை அலலது நீதி நடவடிக்கைக்கு சமமானது ஈடானது அல்ல.
இது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்தும்.
யுத்த குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டிற்கு நாங்கள் பொறுப்புக்கூறலை கோரும்போது சிலர் நாங்கள் முழு இலங்கை இராணுவத்தையும் தண்டிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக அதனை திரிபுபடுத்துகின்றனர்.
