சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு;ள்ள அனோஜன் சிவராஜாவிற்கான பொதுமன்னிப்பு கோரும் சட்டபூர்வ மேல்முறையீட்டை இறுதி செய்வதற்காக அந்த நாட்டிற்கு சென்ற இலங்கை குழுவினர் விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் இலங்கை திரும்ப முடியாத நிலையில் சிக்குண்டுள்ளனர்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தலைமையிலான இந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை இறுதி செய்த பின்னர் நேற்று நாடு திரும்பயிருந்தனர்.
எனினும் யேமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் ரியாத் விமானநிலையம் தாக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை குழுவினர் அங்கேயே சிக்குண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் 18ம் திகதி வரை ரியாத்திற்கான சேவையை இடைநிறுத்தியுள்ளது.
இலங்கை குழுவினர் அயல்நாட்டிற்கு சென்று அங்கிருந்து நாடு திரும்புவது குறித்து ஆராய்ந்தாகவும் எனினும் பயணத்தூரம் அதிகம் என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ரியாத்திலிருந்து சண்டே டைம்சிற்கு கருத்து தெரிவித்துள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாசி அனைத்து ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் பொதுமன்னிப்பு கிடைக்கும் என நம்பிக்கையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.