பிரான்ஸ் தலைநகரின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாரிசில் வாகனத்தை செலுத்தியவாறு ஒருவர் 15நிமிடங்களுக்கு மேல் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் இதில் 12 வயது சிறுமியொருவரும் காயமடைந்தார் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஆனால் காரணங்கள் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைப்பு இந்த கொலைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என தெரிவித்துள்ளது.

வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த நபர் தனது கண்ணில் தென்பட்ட நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என டிராப்பெஸ் மேயர் அலி ரபே தெரிவித்துள்ளார்.
அந்த நபர் தனது வாகனத்தில் பல குடியிருப்புகள் ஊடாக பயணித்தார்,எவ்வளவு உயிரிழப்பை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கில் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் அவர் பெரும் அழிவை ஏற்படுத்த முனைந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தனது கண்ணில் தென்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் மருத்துவ நிலையம் விளையாட்டு மைதானம் போன்றவற்றின் மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.