இலங்கையில் பொலிஸாரின் துஸ்பிரயோகங்களுக்கு நீண்ட வரலாறு உள்ள போதிலும் அது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் தொடர்ந்தும் பொலிஸாருக்கு மேலும் அதிகளவு அதிகாரங்களை வழங்க முயல்கின்றது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி இதனை பதிவு செய்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 29 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவமும்,பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற சம்பவமும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது என்ற போர்வையில் பொலிஸார் இழைத்த அநீதிகளுக்கான சமீபத்திய உதாரணங்களாகும்.
இதில் எவ்வித ஆதாரங்களுமின்றி வழக்கு தாக்கல் செய்தல்,நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்க தவறுதல்,பொலிஸ் காவலில் தடுத்துவைக்கப்பட்டவேளை மரணம் ஆகியன அடங்கும்.
இது மிகப்பெருமளவு சம்பவங்களில் ஒரு சிலமாத்திரமே.பொலிஸாரின் மனித உரிமை துஸ்பிரயோகங்களுக்கு நீண்டவரலாறு உள்ளது அவை நன்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன
எனினும் அரசாங்கம் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சட்டமூலம் போன்றவற்றின் மூலம் பொலிஸாரின் அதிகாரங்களை அதிகரிக்க முயல்கின்றது.பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள் கூட ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படலாம்.
அரசாங்கம் இந்த சட்டங்களை முன்வைப்பதும் அதனை நியாயப்படுத்துவதும் பொதுமக்களின் பாதுகாப்பு மனித உரிமைகளை பேணுதல் அரச நிறுவனங்களை பொறுப்புக்கூறச்செய்தல் ஆகியவை குறித்த அரசாங்கத்தின் அலட்சியப்போக்கையே வெளிப்படுத்துகின்றது.
மேலும் இது அரசநிறுவனங்கள் சட்டத்தை மீறி; தங்களுக்கு எந்தவித தண்டனையும் இன்றி தன்னிச்சையாக செயற்பட அனுமதிக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரத்தை ஒன்றுதிரட்டுவதற்கான ஒரு முயற்சியாகவும் இது அமைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.