மாத்தறை மாவட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்க லிமிடெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சுமார் 5,000 மில்லியன் (500 கோடி) ரூபா நிதி மோசடிச் சம்பவத்தில், சமிந்த குணசேகர என்பவரால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 12 வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு மாத்தறை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி வரை இந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெவ்வேறு நபர்களின் வசமிருந்த இந்த வாகனங்களை குற்றப் புலனாய்வுத் துறையினர் (CID) பல சந்தர்ப்பங்களில் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சமிந்த குணசேகரவுக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றை முன்னாள் அமைச்சர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுமார் நான்கு மணி நேரம் முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவருக்குச் சொந்தமான வாகனத்திற்கான குத்தகை (Lease) கொடுப்பனவுகள் மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சமிந்த குணசேகரவினால் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
சந்தேகநபரின் வங்கிச் கணக்குகளில் பெருந்தொகை பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றும் வருணி போகஹவத்தவுக்குச் சொந்தமான ஹோண்டா வெஸல் (Honda Vezel) ரக கார் அண்மையில் பொலிஸ் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டது.
இதேவேளை, சமிந்த குணசேகரவுக்குச் சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவும் கடந்த நாட்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.