இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சமர்ப்பித்துள்ள வரவுசெலவுதிட்டத்தினை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பிந்திய நிதி ஒழுக்கம் மற்றும் ஸ்திரதன்மையின் தொடர்ச்சி என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிருஷ்ணன் பாலேந்திரா பாராட்டியுள்ளார்.
இந்த வரவு செலவுதிட்டம் குறைந்த பணவீக்கம்,நிலையான வட்டிவிகிதம்,மற்றும் புதுப்பிக்கப்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கையின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் திருப்புமுனை என அவர் வர்ணித்துள்ளார்.
இந்த வரவுசெலவுதிட்டம் 2022 நெருக்கடிக்கு பின்னர் தொடங்கிய கொள்கை தொடர்ச்சி பேரினப்பொருளியல் ஒழுக்கத்தை தொடர்ந்தும் வலுப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் லெபனான் சிம்பாப்வே போன்ற நாடுகள் எதிர்கொண்ட ஸ்திரமின்மையிலிருந்து இலங்கை விலகிச்செல்வதை இது ஊக்குவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறையினரை பொறுத்தவரை இந்த வரவுசெலவு திட்டம் ஸ்திரதன்மையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
2022 ம் ஆண்டின் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவை காரணமாக பலநாடுகள் எதிர்கொண்ட பலவருட பணவீக்கம் நாணயமாற்றுவீத வீழ்ச்சி போன்றவற்றை இலங்கை தவிர்த்துக்கொண்டது என தெரிவித்துள்ள அவர் வரவு செலவுதிட்டம் ஸ்திரதன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடகாலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தம் நிதிசீர்திருத்தம் ஆகியவை எவ்வளவு கடினமானவையாக காணப்பட்டாலும் அவை பலன்அளித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரவுகளை பார்த்தால் இலங்கையா என நம்பமுடியாமல் உள்ளது,நாங்கள் தற்போது வலுவான வருமானவளர்ச்சியை காண்கின்றோம்,குறைந்த பணவீக்கங்கள், குறைந்த வட்டிவிகிதங்கள்,குறைக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறை,மேலும் அரசாங்கத்திற்கு சொந்தமான பல நிறுவனங்கள் இலாபம் ஈட்டுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.