துபாய் போல் இந்தியாவும் மாறிவிட்டது.. ரூ.1.17 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்..! உலகளவில் பெரும் பணக்காரர்களின் விருப்ப நகரமாக மாறியிருக்கும் துபாயில் கார் விலை குறைவாக இருப்பதால் அதிகப்படியானோர் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி கார்களை அசால்ட்டாக வாங்குகின்றனர்.
ஆடம்பர கார் உரிமையாளர்கள் மத்தியில் தனித்து நிற்க வேண்டும் என்றால் துபாயில் நம்பர் பிளேட் வாயிலாக தான் வித்தியாசம் காட்ட முடியும். சிங்கிள் டிஜிட் எண் கொண்ட நம்பர் பிளேட் பல நூறு கோடி மதிப்பில் ஏலம் மூலம் வாங்கப்படுகிறது. இதேபோன்ற டிரெண்ட் இந்தியாவிலும் தற்போது அதிகரித்து வருகிறது
ஹரியானா மாநிலத்தில் ஒரு வாகனப் பதிவு எண்ணுக்கு ரூ.1.17 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. ‘HR88 B8888’ என்ற இந்த எண் இந்தியாவிலேயே இதுவரை அதிக விலைக்கு ஏலம் போன விஐபி எண்ணாக மாறியுள்ளது. முழுக்க முழுக்க இணையத்தில் நடந்த ஏலத்தில் 45 பேர் போட்டியிட்டனர்.
நவம்பர் 26 மாலை 5 மணிக்கு ஏலம் முடிவடைந்த நிலையில் இந்தப் புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. 1.17 கோடி ரூபாய் விலையில் நம்பர் பிளேட் வாங்குவது என்பது சாதாரண மக்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தாலும், செல்வந்தர்களுக்கு தங்கள் காரை தனித்துவமாகக் காட்ட இது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறிவிட்டது.