“உலகளாவிய தெற்கு (Global South) பிராந்தியத்தில் குரலற்றவர்களின் குரலை வலுப்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒத்துழைக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற சீனாவின் 15-வது ‘புதிய வரைபடம், புதிய அடிவானம்’ (New Blue Print New Horizon) வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், “உலகளாவிய தெற்கு பிராந்தியமானது முன்னேற்றம் காண்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச சமூகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பும் சிறந்த உறவும், உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் உள்ள குரலற்றவர்களின் குரலை மேலும் வலுப்படுத்தும் என்பது எங்களது உண்மையான நம்பிக்கையாகும்,” என்றார்.
“சர்வதேச மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில், உலகளாவிய தெற்கு பிராந்தியத்திற்கு ஒரு சாதகமான இடமும் பிரசன்னமும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், சர்வதேச அரசியல் ஒழுங்கு மாற்றியமைக்கப்படுவது அவசியமாகும்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்
