இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணி குடும்பம் ஒன்றுஇ தமது விசா காலத்தை நீட்டிப்பதில் எதிர்கொண்ட சிரமங்களை “இதுவரை அனுபவித்ததிலேயே மிகவும் வேதனையான அனுபவம்” எனத் தெரிவித்துள்ளனர்.
டிக்டாக்கில் (TikTok) ‘The Hutchinsons’ எஎன்று அழைக்கப்படும் இந்தக் குடும்பத்தினர் விசா இல்லாத திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். தமது தங்கியிருக்கும் காலத்தை நீட்டிப்பதற்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அவர்கள் சென்றிருந்தனர்.
விசாவை நீட்டிப்பதற்காக ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்திற்குப் பிறகு வர வேண்டிய கட்டண மின்னஞ்சல் வராததால் அவர்கள் நேரடியாக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அலுவலகத்தில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் முறையான வழிகாட்டுதலோ அல்லது உதவி மையங்களோ அங்கு இல்லை என்றும் அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். “அங்கு இரண்டு பெரிய வரிசைகள் இருந்தன… அனைவரும் கண் தொடர்பைத் தவிர்த்து தலையைக் குனிந்து கொண்டிருந்தனர் அங்கு யார் வேலை செய்கிறார்கள் யார் செய்யவில்லை என்று எங்களால் சொல்ல முடியவில்லை” என்று ஒரு குடும்ப உறுப்பினர் கூறினார். தெளிவான தகவல் பரிமாற்றம் இன்றி ஊழியர்கள் பாஸ்போர்ட்களைப் பெற்றுக்கொண்டது தங்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் விவரித்தனர்.
மூன்று மணிநேரம் அங்கு செலவழித்த பிறகுஇ இறுதியில் ஹட்சின்சன் குடும்பத்தினர் விசா நீட்டிப்பைப் பெற்றனர். “இதுவரை நாங்கள் சந்தித்த அனுபவங்களிலேயே இது மிகவும் வேதனையானது” என்று அவர்கள் கூறினர்.
“இலங்கையின் கொழும்பில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் இன்று எவ்வளவு கடினமான நாள்! மேலதிகமாக ஒரு வாரம் தங்குவதற்காக இவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டது நிச்சயம் அதற்கு ஈடாகாது. எவ்வாறாயினும் எல்லாம் முடிந்துவிட்டதுஇ இப்போது கிறிஸ்துமஸை அனுபவிக்க வேண்டிய நேரம்” என்று அவர் தனது டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
