சூறாவளியினால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பொருளாதார பாதிப்பை இலங்கை இன்னும் முழுமையாக மதிப்பிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இதுவரை வெளியிடப்பட்ட சேத மதிப்பீடுகள் ஆரம்பகட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலானவை என்றும், விரிவான மதிப்பீட்டிற்கு குறைந்தது இன்னும் நான்கு வாரங்கள் ஆகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்த கலாநிதி ஜயதிஸ்ஸ, உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய கண்டுபிடிப்புகள் அனர்த்தத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விரைவான மதிப்பீட்டைப் பிரதிபலிக்கின்றன என்றும், அதனைப் பொருளாதாரத்திற்கான இறுதிச் செலவாகக் கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டார். மறைமுக இழப்புகள் மற்றும் நீண்டகால மீட்புத் தேவைகளை கணக்கில் கொள்ளும்போது, உண்மையான பொருளாதார பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
திங்களன்று வெளியிடப்பட்ட உலக வங்கியின் ‘GRADE’ அறிக்கையின்படி, டிட்வா சூறாவளி சுமார் 4.1 பில்லியன் டொலர் (சுமார் 1.3 ட்ரில்லியன் ரூபாய்) நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 4 சதவீதத்திற்கு சமமாகும். இந்தச் சேதமானது நாடு முழுவதும் உள்ள கட்டிடங்கள், விவசாயம் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை உள்ளடக்கியதுடன், இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான காலநிலை அனர்த்தங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.
இந்தச் சூறாவளியினால் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் இரண்டு மில்லியன் மக்களும் 500,000 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வங்கியின் மதிப்பீடு சொத்துக்களுக்கு ஏற்பட்ட நேரடி சேதங்களை மட்டுமே கணக்கிட்டுள்ளது; இது வருமான இழப்பு, வணிகத் தடைகள் அல்லது மீளக்கட்டியெழுப்புவதற்கான முழுச் செலவையும் உள்ளடக்கவில்லை.
ஒட்டுமொத்த பொருளாதார அதிர்ச்சியைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்கும், வரும் வாரங்களில் நிதி மற்றும் கொள்கை ரீதியான பதிலளிப்புகளை வடிவமைப்பதற்கும் விரிவான தரைமட்ட மதிப்பீடு அவசியம் என்று கலாநிதி ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தினார்.
