‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்து, விரைவாகப் புனரமைக்கக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றவும் கல்வி அமைச்சு, யுனிசெப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
டிசம்பர் 24ஆம் திகதி, ‘டிட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்திலுள்ள மீகஹகிவுல தேசிய பாடசாலையைப் பார்வையிட்ட பின்னர் பிரதமர் இதனைத் தெரிவித்தார் என பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் முழுமையாக சேதமடைந்த கெட்டவத்த யோத உல்பொத்த சமூக மண்டபத்தில் இயங்கி வந்த முன்பள்ளியையும் பிரதமர் பார்வையிட்டார்.
அம்முன்பள்ளியைப் பாதுகாப்பான இடத்தில் மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் குறித்து அவதானம் செலுத்திய பிரதமர், அனர்த்த நிலைமையால் இயங்க முடியாமல் போன முன்பள்ளிகளை இனங்கண்டு, அந்த ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மண்சரிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பஸ்சறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையையும் அவர் பார்வையிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.