அக்டோபர் 2023-இல் காசா பகுதியில் போர் மற்றும் இனப்படுகொலைத் தாக்குதல்கள் தொடங்கிய பிறகு முதன்முறையாக முற்றுகையிடப்பட்ட காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையிலும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் பொதுவெளியில் கிறிஸ்மஸ் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக அங்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் காசா மக்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிக எளிமையாக நடத்தப்பட்டன அல்லது முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் பெத்லஹேமில் ஆயிரக்கணக்கான மக்கள் சாண்டா கிளாஸ் உடைகளை அணிந்து இசை முழங்க வீதிகளில் அணிவகுத்துச் சென்று உற்சாகமாகக் கொண்டாடினர்.
காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்குப் புகலிடமாகத் திகழும் ‘திருக்குடும்ப தேவாலயத்திற்கு’ மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய தாக்குதல்களால் இந்த தேவாலயம் குறிப்பிடத்தக்க அளவு சேதமடைந்திருந்த நிலையிலும் அங்கு மக்கள் ஒன்று கூடி கிறிஸ்மஸைக் கொண்டாடினர்.