ஆஸ்திரேலியாவின்முன்னாள் துடுப்பாட்ட வீரர் டேமியன் மார்ட்டின் (54), உடல்நலக்குறைவு காரணமாக குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் செயற்கை கோமா (Induced Coma) நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது “தனது வாழ்வா சாவா” என்ற போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.
பாக்சிங் டே (Boxing Day) அன்று வீட்டில் ஓய்வெடுக்கச் சென்ற மார்ட்டினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மெனிஞ்சைடிஸ் (Meningitis – மூளைக்காய்ச்சல் பாதிப்பு) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்டு’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நோய் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக செயற்கை கோமா நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன், “டேமியன் மார்ட்டினுக்கு எங்களது அன்பும் பிரார்த்தனைகளும். வலிமையுடன் போராடுங்கள் ஜாம்பவானே,” என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மார்ட்டினின் நெருங்கிய நண்பரும் முன்னாள் வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், “அவருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரும் தங்கள் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் அனுப்பி வருவது அவரது குடும்பத்தினருக்குத் தெரியும்,” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து நட்சத்திரம் பிராட் ஹார்டி தனது வானொலி நிகழ்ச்சியில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். “மேற்கு ஆஸ்திரேலியாவின் சாம்பியன் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். மார்ட்டோ மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்காக 1999 மற்றும் 2003 உலகக்கோப்பைகளை வென்றவர். குறிப்பாக 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக உடைந்த விரலுடன் விளையாடி 88 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தனது நேர்த்தியான பேட்டிங் ஸ்டைலுக்காக உலகப்புகழ் பெற்றவர்.
நேர்த்தியான துடுப்பாட்ட முறைக்காக பெயர் பெற்ற மார்ட்டின், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள், மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மார்ட்டினின் கிரிக்கெட் வாழ்க்கை:
-
டெஸ்ட் போட்டிகள்: 1992 முதல் 2006 வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 சதங்களுடன் 4406 ஓட்டங்களைக் (Runs) குவித்துள்ளார். அவரது சராசரி 46.37 ஆகும்.
-
உலகக்கோப்பை வெற்றி: 2003 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 88 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காமல்) எடுத்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
-
ஒருநாள் போட்டிகள்: 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதங்களுடன் 5346 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
