கொழும்பு மாநகர சபையில் (CMC) 2010 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசாரணை ஆணைக்குழு (Commission of Inquiry) ஒன்றை நியமித்துள்ளார்.
இது தொடர்பாக 2025 டிசம்பர் 30 அன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில், ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் பல புகார்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களால் அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் வருவாய்க்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, கொழும்பு மாநகர சபை தனது எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை அடையத் தவறியுள்ளதாகவும் அந்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கும், அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்கும், எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் இந்த விசாரணை அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்:
இந்த விசாரணை ஆணைக்குழுவிற்காகப் பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
சட்டத்தரணி பியசேன ரணசிங்க – முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் (தலைவர்)
ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க – இலங்கை கணக்காய்வு சேவையின் சிரேஷ்ட தரம் I அதிகாரி
டி.எஸ். விக்ரமசிங்க – முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
காலக்கெடு:
இந்த ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்து மூன்று மாதங்களுக்குள் ஓர் இடைக்கால அறிக்கையையும், அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் மேலதிக இடைக்கால அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.