ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா மேலதிகமாக 25 சதவீத வரிவிதிப்பை விதிக்கக்கூடும் என்ற கேள்விக்கு பதிலளித்த இலங்கையிலுள்ள ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ், இருதரப்பு உறவுகள் இத்தகைய எச்சரிக்கைகளைத் தாங்கி நிற்கும் அளவுக்கு வலிமையானவை என்று கூறினார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே தூதுவர் இதனைத் தெரிவித்தார். மேலும், இத்தகைய கேள்விகள் இலங்கைத் தரப்பிடமே கேட்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உண்மையில், இந்தக் கேள்வி இலங்கை அதிகாரிகளிடமே கேட்கப்பட வேண்டும். ஏனெனில் இது இலங்கை அரசாங்கம் சார்ந்த ஒரு விஷயமாகும்,” என்று அவர் கூறினார்.
இலங்கைத் தேயிலையின் முக்கிய கொள்வனவாளர் என்ற ரீதியில், ஈரான் தொடர்ந்து இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில், அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஈரான் போன்ற பெரிய நாடுகளுடன் தனக்கிருக்கும் மிகத் தொன்மையான உறவுகளைப் பேணுவதில் இலங்கை மிகவும் விழிப்புடன் இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்றார்.
ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தின் மீது 25 சதவீத வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இலங்கை பிரதானமாக ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) போன்ற மூன்றாம் நாடுகளின் ஊடாகவே ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறது.
இதற்கிடையில், ‘LIRNEasia’ எனும் சிந்தனைக்குழாமின் தலைவரான முன்னணி அறிஞர் ரோஹன் சமரஜீவ, அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையினால் ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் குறித்து பதிலளித்தார். இதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துவதாக அவர் கூறினார்.
“ஏட்டு அளவில், நாம் ஈரானுக்கு தேயிலை விற்பனை செய்யலாம். அதேபோல் ஈரானிடமிருந்து உரம் போன்ற பொருட்களை மூன்றாம் நாடுகளின் ஊடாக வாங்கலாம். தேயிலை விற்பனையானது அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதி மீது அபராத வரிகளைத் தூண்டும். இடைத்தரகர்களால் இனி மலிவான உரத்தைப் பெற முடியாத நிலை ஏற்படும் என்பதால், சில மாதங்களில் நாம் உரத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் அல்லது தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறான தன்னிச்சையான மாற்றங்கள் சர்வதேச வர்த்தகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ட்ரம்ப்பிற்கு இத்தகைய யோசனை வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கலாம். இதனால் நஷ்டங்கள் ஏற்படும் மற்றும் வர்த்தகம் மிகவும் அபாயகரமானதாக மாறும்,” என்று அவர் கூறினார்.
ஈரானின் உலகளாவிய வர்த்தகப் பங்காளிகளுள் சீனா மற்றும் இந்தியாவும் அடங்கும். 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஈரானுக்கான ஏற்றுமதி சுமார் 67.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இறக்குமதி 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.