கொழும்பில் நடைபெற்ற உலக கொன்சல்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசிய பிராந்திய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொருளாதார உறுதித்தன்மை, நீண்டகால வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இலங்கை கொன்சல்கள் சங்கம் மற்றும் உலக கொன்சல்கள் சம்மேளனம் ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உயர்மட்ட மாநாடு, சினமன் லைஃப் (Cinnamon Life) ஹோட்டலில் நடைபெற்றது.
பிராந்திய ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து கலந்துரையாடுவதற்காக இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் இந்த மேடையில் ஒன்றிணைந்தனர்.
இங்கு உரையாற்றிய பிரதமர், தெற்காசியாவில் ஒரு நம்பகமான மற்றும் முன்னோக்கிச் செல்லும் நாடாக இலங்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு சர்வதேச பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதால், இந்த மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியின் பாதிப்புகளைக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்ற அபாயங்கள் தேசிய எல்லைகளைக் கடந்தது எனவும், இதற்காக சர்வதேச நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
அரசாங்கத் துறையின் செயல்திறனை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரித்தல், டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் விளக்கினார்.
நிதிப் பொறுப்புணர்வு, நிலையான கடன் மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறன் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தெளிவான மற்றும் ஒழுக்கமான கொள்கை திசையில் அரசாங்கம் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றுகையில், இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாகவும், நம்பகமான சர்வதேச பங்காளியாகவும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, FICAC தலைவர் நிக்கோலஸ் கே. மார்கரோபௌலோஸ், இலங்கை கொன்சல்கள் சங்கத்தின் தலைவர் மஹேன் காரியவசம் மற்றும் இராஜதந்திர சமூகத்தினர் கலந்துகொண்டனர்.