வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, அப்பாவி வேலை தேடுபவர்களிடமிருந்து சுமார் 20 மில்லியன் ரூபாய் பணத்தைச் சேகரித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த கணவனும் மனைவியும் சீதுவ பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) இணைக்கப்பட்ட பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட தம்பதியரில் மனைவிக்கு எதிராக மாத்திரம் 12 புகார்கள் பதிவாகியிருந்த நிலையில், பொலிஸார் அவரைத் தேடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான சுமார் 200 ஒப்பந்தப் பத்திரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட சுமார் 300 ஆவணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேகநபர்கள் எவ்வித உரிமமும் இன்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்தி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது