ஜப்பானிய பாவிக்கப்பட்ட வாகன ஏற்றுமதித் துறையில் மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ள ‘AA Japan (Private) Limited’ நிறுவனம், 2026 ஜனவரியில் இலங்கையில் தனது முதல் அலுவலகத்தைத் திறந்துள்ளதன் மூலம் நேரடியாக இலங்கை சந்தைக்குள் நுழைந்துள்ளது.
இலங்கை மீண்டும் வாகன இறக்குமதிக்கான சந்தையைத் திறந்ததிலிருந்து, AA Japan நிறுவனம் 6,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 1996 ஆம் ஆண்டு டோக்கியோவில் ஹமீட் ரம்ஸான் என்பவரால் ஒரு சிறிய வணிகமாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது ஆண்டுக்கு 80 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 18,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை அனுப்பும் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
இலங்கையில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம், வாடிக்கையாளர்கள் இனி தொலைபேசி அல்லது இணையம் வழியாக அன்றி, நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று தமக்குத் தேவையான வாகனங்கள் குறித்து ஆலோசனைகளைப் பெற முடியும். இந்த அலுவலகத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சேவைகள் வழங்கப்படுவது விசேட அம்சமாகும்.
ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முழுமையான செயல்முறையையும் இந்த அலுவலகம் கையாள்கிறது. சரியான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பது, துல்லியமான விலை மதிப்பீடுகளை வழங்குவது, கப்பல் போக்குவரத்து (Logistics), தேவையான ஆவணங்களை நிர்வகிப்பது, வாகனப் பரிசோதனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆலோசனைகளை வழங்குவது போன்ற அனைத்து சேவைகளும் இதில் அடங்கும்.
“எமது இலங்கை வாடிக்கையாளர்கள் உலகின் ஏனைய இடங்களைப் போலவே உயர்தர சேவையைப் பெற தகுதியானவர்கள். உள்ளூர் அலுவலகம் இருப்பதால் விரைவான பதிலளிப்பு, சிறந்த தகவல் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை வழங்க முடியும்,” என AA Japan நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான ஹமீட் ரம்ஸான் தெரிவித்தார்.
தற்போது கென்யா, ஆஸ்திரேலியா, போட்ஸ்வானா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள AA Japan, இலங்கையிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.