ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்கக் காடுகளில் காணப்படும் ஒரு வகை தவளையிலிருந்து (Dart Frog) பெறப்பட்ட விஷத்தைப் பயன்படுத்தி கொல்லப்பட்டதாக பிரித்தானியா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
நவால்னி சைபீரியா சிறை முகாமில் இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘எபிபாடிடின்’ (Epibatidine) என்ற நச்சுப்பொருள் கண்டறியப்பட்டதையடுத்து பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவைக் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நச்சு நவால்னியின் உடலில் இருந்ததற்கு எந்தவித நியாயமான விளக்கமும் இருக்க முடியாது என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பிரித்தானிய வெளியுறவுச் செயலர் யவெட் கூப்பர், “ரஷ்ய சிறையில் இருந்த அலெக்ஸி நவால்னிக்கு எதிராக இவ்வளவு வீரியமிக்க விஷத்தைப் பயன்படுத்த ரஷ்ய அரசாங்கத்திற்கு மட்டுமே தேவையான ஆதாரங்களும், நோக்கமும் மற்றும் வாய்ப்பும் இருந்தது” என்றார்.
இந்தக் கண்டுபிடிப்புகளை வெளியுறவுச் செயலர் கூப்பர் அறிவித்த அதே வேளையில், பிரித்தானியா, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. இந்த வார இறுதியில் நடந்த மாநாட்டில் நவால்னியின் மனைவி யூலியா நவால்னாயாவை கூப்பர் சந்தித்துப் பேசினார்.
“ரஷ்யா நவால்னியை ஒரு அச்சுறுத்தலாகக் கருதியது. இத்தகைய விஷத்தைப் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்ய அரசு தன்னிடம் உள்ள கீழ்த்தரமான ஆயுதங்களையும், அரசியல் எதிர்க்கட்சிகள் மீது தனக்கு இருக்கும் அளவற்ற பயத்தையும் வெளிப்படுத்தியுள்ளது” என்று கூப்பர் மேலும் கூறினார்.
அவர்களது அறிக்கையில், “இந்த எபிபாடிடின் நச்சு தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் தவளைகளில் மட்டுமே இயற்கையாகக் காணப்படுகிறது. எனவே இது நவால்னியின் உடலில் இருந்ததற்கு எந்தவித அப்பாவித்தனமான விளக்கமும் இருக்க முடியாது” என நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
வேதியியல் ஆயுதத் தடை உடன்படிக்கையை ரஷ்யா மீறியுள்ளதாக பிரித்தானியா அந்த அமைப்பிடம் (OPCW) முறைப்படி புகார் அளித்துள்ளது. நவால்னியின் துணிச்சலைப் பாராட்டிய பிரித்தானியப் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், உண்மையை வெளிப்படுத்தும் அவரது உறுதிப்பாடு ஒரு அழியாத பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது என்றார்.
47 வயதான நவால்னி, 2024 பிப்ரவரி 16 அன்று சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். முன்னதாக 2020-ல் அவர் ‘நோவிசோக்’ என்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
