வியாழக்கிழமை, 26 பிப்ரவரி 2026
அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக விவகார அதிகாரி (Chargé d’Affaires) ஜேன் ஹோவெல், அமெரிக்காவை பாதுகாப்பானதாகவும் வலிமையானதாகவும் மாற்றுவதற்கான ட்ரம்ப் கால வெளியுறவு கொள்கை முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டினார்.
-
அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம் மற்றும் டிஜிட்டல் ஏற்றுமதிகளின் இறக்குமதியை அதிகரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை நிறுவனங்கள் ‘SelectUSA’ மூலம் அமெரிக்காவில் முதலீடு செய்யவும், தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.
-
ஒழுக்கமான அமெரிக்க முதலீடானது, கணிக்கக்கூடிய விதிமுறைகள், ஒப்பந்த அமலாக்கம் மற்றும் வெளிப்படையான கொள்முதல் செயல்முறைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான ஆழமான பொருளாதார ஈடுபாடானது, நிலையான சீர்திருத்தங்கள் மற்றும் பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஓட்டங்களைப் பொறுத்தே அமையும்என அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான அதிகாரி ஜெய்ன் ஹொவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மூலதனம் விரிவடைய வேண்டுமானால், விதிமுறைகள் கணிக்கக்கூடியதாகவும், ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டியதாகவும், கொள்முதல் நடைமுறைகள் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக விவகார அதிகாரி வணிக மற்றும் அரசாங்கத் தலைவர்களிடம் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ‘AmCham Elevate Sri Lanka CEO Forum 2026’ நிகழ்வில் உரையாற்றிய ஹோவெல்: “இன்றைய அமெரிக்க வெளியுறவு கொள்கை ஒரு எளிய கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது: அது அமெரிக்காவை பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும், மேலும் வளமானதாகவும் மாற்ற வேண்டும். சந்தைகள் இயங்குவதற்கும் மூலதனம் நகர்வதற்கும் ஸ்திரத்தன்மையே அடித்தளமாகும்,” என்றார்.
அமெரிக்கா உட்பட தனியார் மூலதனம் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டுமானால், இலங்கை தனது முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை, அதிகாரத்துவ தடைகள், சீரற்ற தரநிலைகள் மற்றும் தெளிவற்ற கொள்முதல் முறைகளைச் சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் வாய்ப்புகளைக் காண்பதாகக் குறிப்பிட்டார்.
“ஆனால் அமெரிக்க முதலீடு ஒழுக்கமானது: ஒப்பந்தங்கள் மதிக்கப்படும், விதிமுறைகள் கணிக்கக்கூடியவை மற்றும் கொள்முதல் வெளிப்படையானது என எங்கெல்லாம் சூழல் நிலவுகிறதோ, அங்கேயே முதலீடு செல்லும். அத்தகைய நிலைமைகள் இருக்கும் இடங்களில் வாய்ப்புகள் பின்தொடரும்; கொழும்பு துறைமுகம் எமது பொருளாதார நலன்கள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று ஹோவெல் கூறினார்.
தெற்காசியாவின் முன்னணி கொள்கலன் மறுதிருப்பல் மையமாக (transshipment hub), கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கம் 2027-க்குள் 15 மில்லியன் கொள்கலன்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கான விநியோகச் சங்கிலித் திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தொடர்ந்து 13-வது ஆண்டாக உலகின் முதன்மையான அந்நிய நேரடி முதலீட்டு (FDI) இடமாகத் திகழ்வதை அவர் சுட்டிக்காட்டினார். ‘SelectUSA’ திட்டம் மூலம் இலங்கை நிறுவனங்கள் நேரடியாக அமெரிக்காவின் மாநில அளவிலான தலைவர்களுடன் தொடர்புகொண்டு, சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து, உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருளாதாரத்திற்குள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
‘டிட்வா’ (Ditwah) புயலுக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு
புயல் பாதிப்பு மற்றும் மறுகட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், சேதமடைந்த சொத்துக்களை மீட்டெடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நவீன மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றார். புயல் பாதிப்பின் போது, அமெரிக்கா 72 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவியை வழங்கியதையும், பின்னர் அந்தத் தொகையை இருமடங்காக்கி, இரண்டு C-130 விமானங்களைப் பயன்படுத்தி 170,000 கிலோவிற்கும் அதிகமான பொருட்களை வழங்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.