இலங்கை அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் சட்டம் அரசியலமைப்பில் மனித உரிமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும் இலங்கை ஏற்றுக்கொண்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் முரணாக உள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வர்த்தமானியில் ஒக்டோபர் ஆறாம் 2026 வெளியான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் என்ற சட்டமூலம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டவாக்கத்தின் அவசியத்தை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது எனினும் அத்தகைய சட்டமூலம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைளுக்கும் உடன்படுவதாக காணப்படவேண்டும்.
எனினும் வர்த்தமானியில் வெளியான சட்டமூலத்தில் காணப்படும் விடயங்கள் இலங்கை அரசியலமைப்பில் மனித உரிமைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளுக்கும் முரணாணதாக காணப்படுகின்றது.
மேலும் இது 1979 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை விட கடுமையானதாகயிருக்ககூடும்.
உதவிபொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு குறையாத பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை ஒரு நபருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சட்டமூலம் வழிவகுக்கின்றது.இந்த சட்டமூலத்தின் ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16 வது பிரிவை அப்படியே பிரதிபலிக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16வது பிரிவு குறித்து கடந்தகாலங்களில் எங்கள் கரிசனைகளை வெளியிட்டுள்ளோம்.பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை சாட்சியமாக ஏற்பதானது காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை சித்திரவதை செய்வதற்கும் துன்புறுத்துவதற்கும் வழிவகுக்கும்.
ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினரா என்பதை தீர்மானிப்பதற்கு இந்த சட்டமூலமானது மிகவும் பரந்த அடிப்படையிலான வரைவிலக்கணங்களை முன்வைக்கின்றது.
அறியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் ஆடைகள், கைச்செய்கைகள், மொழி அல்லது பச்சை குத்தல்கள்,ஆகியவற்றை பின்பற்றுவது அல்லது அவற்றை பின்பற்றும் உறுப்பினருடன் வெறுமனே தொடர்புகளை கொண்டிருப்பது போன்றவை இந்த வரையறைகளில் உள்ளடங்குகின்றன.
இந்த சட்டமூலமானது நியாயமற்ற முறையில் பலரையும் சந்தேகநபர்கள் வலைக்குள் கொண்டுவரும் ஆபத்தை கொண்டுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.