கருணா அம்மான் 2007 இல் பிரித்தானியா செல்வதற்காக போலி கடவுச்சீட்டுகளை தேசிய புலனாய்வு சேவையின் இயக்குநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே பெற்றுக்கொடுத்தார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
அவர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது
சுரேஸ் சாலே உட்பட இரண்டு புலனாய்வு அதிகாரிகள் கருணா அம்மான் ஐக்கிய இராச்சியத்திற்கு செல்வதற்காக அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
கருணா அம்மான் பிரிட்டன் சென்றதும் சாலியும் அங்கு சென்று கருணாவை சந்தித்தார் எனினும் சுரேஸ்சாலே இதனை நிராகரிக்கின்றார்.
இந்த சந்திப்பிற்கு இரண்டு நாட்களின் பின்னர் போலிகடவுச்சீட்டினை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கருணா கைதுசெய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
கருணாஅம்மானிற்கான கடவுச்சீட்டினை சுற்றாடல் விவகார அமைச்சின் செயலாளர் துஸ்மந்த குணவர்த்தனவின் பெயரில் பெற்றிருந்தார்கள்.
தற்போது அவ்வாறான ஒருவர் இருக்கின்றாரா என்பதையே உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சிடமிருந்தே இந்த விடயம் குறித்து முழுமையான விபரங்களை பெறவேண்டும்.
சுரேஸ் சாலே ஒரு கடவுச்சீட்டு நிபுணர் இரண்டுமூன்று கடவுச்சீட்டுகளை வைத்திருக்கின்றார் என திலீப பீரிஸ் தெரிவித்தார்.