முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலத்தில் (Prevention of Organised Crimes Bill) கீழ் சந்தேகநபர்களைத் தடுப்புக் காவலில் வைக்கும் காலத்தை 72 மணிநேரத்திலிருந்து 48 மணிநேரமாகக் குறைக்க அரசாங்கம் உடன்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்திற்கு இன்று (09) தெரிவிக்கப்பட்டது.
சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை சவால் செய்யும் மனுக்கள் மீதான விசாரணையின் போது,சட்டமா அதிபர் திணைக்களத்தின்சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
குற்றவியல் கும்பல்களுடனான தொடர்புகளை அடையாளம் காண்பதற்காக ஒரு நபரின் உடலிலுள்ள பச்சைக் குத்தல்கள் (tattoos) மற்றும் அடையாளங்கள் தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டத்திலுள்ள பிரிவுகள் திரும்பப் பெறப்படும் என்றும் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
கூடுதலாக, பாரிய குற்றவியல் வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு முந்தைய நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியையும் நீக்க அரசாங்கம் சம்மதித்துள்ளது.
முன்மொழியப்பட்ட இச்சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்களை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில் இந்த அண்மைக்கால திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.
விசாரணைகளை நிறைவுசெய்த உச்ச நீதிமன்றம், சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்த தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அறிவிக்கவுள்ளதாக அறிவித்தது.