‘டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து, இலங்கையின் மீதான உலகளாவிய நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு நாடு தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்குமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் டிசம்பர் 16, 2025 அன்று ஒரு மாத கால சர்வதேச விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த பிரச்சாரம் மெட்டா (Meta) மற்றும் கூகுள் (Google) தளங்களில் முன்னெடுக்கப்படுகிறது. கொழும்பு நகரை இலங்கையின் நுழைவாயிலாக முன்னிலைப்படுத்தும் இத்திட்டம், ஐரோப்பா (லண்டன், பாரிஸ் மற்றும் பிராங்க்ஃபர்ட்), ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய முக்கிய சந்தைகளைக் குறிவைக்கிறது. இலங்கை அல்லது அதற்கு இணையான பிற நாடுகளுக்குப் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை இது சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விமான சேவை என்ற ரீதியிலும், நாட்டின் சர்வதேச பிரதிநிதி என்ற ரீதியிலும், இலங்கை பாதுகாப்பானது மற்றும் சுற்றுலாவுக்குத் தயார் என்பதை உலகப் பயணிகளுக்கு உறுதியளிப்பதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமைத்துவப் பங்கை ஏற்றுள்ளது. விமானச் சேவைகள் சீராக இயங்குவதையும், நேர அட்டவணைகள் மாறாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, பயணிகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த இந்த பிரச்சாரம் உதவுகிறது.
இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வர்த்தகப் பிரிவுத் தலைவர் திமுது தென்னகோன் கூறுகையில், “டிட்வா சூறாவளிக்கு உடனடிப் பின்னரான இந்த காலகட்டத்தில், குறிப்பாக பயணங்கள் அதிகமுள்ள காலப்பகுதியில் பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானது. தேசிய விமான சேவை என்ற வகையில், இலங்கையை மீண்டும் உலகத்துடன் இணைப்பதன் மூலம் இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுப்பது எமது பொறுப்பாகும்,” எனத் தெரிவித்தார்.
விமானப் பதிவுகள் ரத்து செய்யப்படுவதைக் குறைக்கவும், வரவிருக்கும் காலத்திற்கான பதிவுகளைத் தக்கவைக்கவும் இந்த டிஜிட்டல் முயற்சி இலக்கு வைத்துள்ளது. அத்துடன், கொழும்பில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைச் சித்தரிக்கும் ஒரு குறுகிய வீடியோவையும் விமான நிறுவனம் தயாரித்துள்ளது. இது டிட்வா சூறாவளிக்குப் பிறகும் இலங்கை இயல்பு நிலையில், உற்சாகமாக உள்ளது என்பதை உலகுக்குக் காட்டுகிறது.
சுமார் இரண்டு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ, கொழும்பு நகரம் மற்றும் அங்குள்ள முன்னணி ஹோட்டல்களை மையமாகக் கொண்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும். இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கவும், அந்நியச் செலாவணி வரவை அதிகரிக்கவும், நீண்ட கால அடிப்படையில் நாட்டின் சுற்றுலா பிராண்டை வலுப்படுத்தவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்பார்க்கிறது.