மே 16 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு 50 சதவீத கூடுதல் கட்டணம் (surcharge) பொருந்தாது என்பதால், அதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இறக்குமதியாளர்கள் வாகனங்களின் விலைகளை செயற்கையாக அதிகரித்தால், அது தவறான செயலாகும் என்று கூறினார்.
வாகன விலைகளை நியாயமற்ற முறையில் அதிகரிக்கும் இறக்குமதியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது குறித்து மக்களுக்கு அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும், அவ்வாறு நியாயமற்ற முறையில் அதிகரிக்கப்பட்ட விலைகளில் வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.