இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களுக்குமான (All-format) புதிய துணைத்தலைவராகநியமிக்கப்பட்டுள்ள கமிந்து மெண்டிஸ், தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு தனது ஆட்டத்தைப் பாதிக்காது என்றும், மாறாக அணிக்கு இன்னும் அதிகமாகப் பங்களிக்க அது தனக்கு ஊக்கமளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
வரும் புதன்கிழமை (ஜூன் 3) முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தொடங்கவுள்ள மூன்று வடிவங்களைக் கொண்ட இருதரப்புத் தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த வாரம் தேசிய அணியுடன் புறப்படுவதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு அளித்த ஒரு சிறிய பேட்டியில் அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.
2016 முதல் 2018 வரை இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட தலைமைத்துவ அனுபவம் கொண்ட கமிந்து மெண்டிஸ், இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக புதிய ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் குசல் மெண்டிஸ் மற்றும் டெஸ்ட் கேப்டன் தனஞ்செய டி சில்வா ஆகியோரின் துணையாக நியமிக்கப்பட்டார்.
துணைக்கப்டன் பொறுப்பு தனக்கு ஒரு சுமையாக இருக்காது என்று கூறிய அவர், தனது பேட்டிங் மூலமே தனது திறமையை நிரூபிக்கப் போவதாகவும், அதுவே தனது தாரக மந்திரம் என்றும் வலியுறுத்தினார்.
“நான் மூன்று வடிவங்களிலும் சுதந்திரமாக ரன்களைக் குவிக்கும் ஒரு பேட்ஸ்மேனாக இருந்துள்ளேன்,” என்று 27 வயதான இந்த இடதுகை பேட்ஸ்மேன் குறிப்பிட்டார். “இந்த புதிய பொறுப்பு, அணிக்கு எனது பங்களிப்பை மேலும் அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன், மேலும் வரவிருக்கும் இந்தத் தொடர் அதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.”
இரு கைகளிலும் பந்துவீசும் திறமை கொண்ட (Ambidextrous) இந்த கிரிக்கெட் வீரர், புதிய பயிற்சியாளர் குழுவுடன் இணைந்து, தங்களின் புதிய பயணத்தை ஒரு வெற்றிகரமான தொடக்கத்துடன் ஆரம்பிக்க விரும்புவதாகவும், இந்த சுற்றுப்பயணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கடமைகள் காரணமாகப் புதிய தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனுடன் (Gary Kirsten) ஒரே ஒரு பயிற்சி அமர்வில் மட்டுமே தன்னால் பங்கேற்க முடிந்தது என்று கூறிய மெண்டிஸ், டி20 தொடரான ஐபிஎல்-இல் விளையாடிய அனுபவம் தனக்கு நல்ல முறையில் கைக்கொடுக்கும் என்றும் அழுத்தமாகக் கூறினார்.
“கேரியுடன் எனது ஒரே ஒரு பயிற்சி அமர்வு நன்றாக அமைந்தது. அவர் தன்னிடம் உள்ள அசாத்திய அனுபவத்தைக் கொண்டு வருவார் என்று நான் நினைக்கிறேன், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் விளையாட எங்களுக்குக் கிடைத்திருப்பது ஒரு பாக்கியம். ஐபிஎல் மூலம் எனக்குக் கிடைத்த கூடுதல் அனுபவம், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான் சிறப்பாகச் செயல்பட உதவும்,” என்று புதிய துணைக்கப்டன் கமிந்து மெண்டிஸ் நகைச்சுவையாகக் கூறினார்.