BBC
இஸ்ரேல் குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வெளிப்படையானவையாக அமைந்துள்ளதோடு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான கோபத்தையும் மோதலையும் வெளிப்படுத்துகின்றன.
ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை நோக்கி டிரம்ப் நகரும் பல சந்தர்ப்பங்களில், இஸ்ரேலியத் தலைவர் லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார் – ஹெஸ்பொல்லா அமைப்பின் ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இதைச் செய்வதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால், இந்த வார இறுதியில் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை – தான் ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டவிருந்த தருணத்தில் நடந்ததொன்று என்பதால் – “நெறிமுறையற்ற கொடூரமானத் தாக்குதல்” (Vicious) என்று டிரம்ப் விவரித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹெஸ்பொல்லா மோதலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவர், நெதன்யாகு இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு, அவர் அளவுக்கு அதிகமான மற்றும் சமமற்ற பலத்தைப் (Disproportionate force) பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
“நீங்கள் ஒரு நபரைத் தேடும் ஒவ்வொரு முறையும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற அனைவரையும் கொல்லாமல் இஸ்ரேலால் இந்த வேலையைச் செய்ய முடியாவிட்டால்… சிரியா அந்த வேலையைச் செய்யும்,” என்று சிரிய அதிபர் அஹ்மத் அல்-ஷாராவை (Ahmed al-Sharaa) குறிப்பிட்டு டிரம்ப் கூறினார்.
நெதன்யாகுவைப் போலன்றி, சிரியாவில் ஹெஸ்பொல்லா அமைப்பை அதிபர் அல்-ஷாரா மிக விரைவாகக் கையாண்டதாக டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
அல்-ஷாரா என்பவர் முன்னாள் சுன்னி ஜிகாதி ஆயுததாரியாவார். தற்போது மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் சிரியாவை வழிநடத்தி வரும் அவரை, லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான போரை வழிநடத்துமாறு டிரம்ப் பரிந்துரைப்பது போலத் தோன்றுகிறது. லெபனானின் மதரீதியான பலவீனம் மற்றும் கடந்த கால சிரிய தலையீடுகளால் மோசமடைந்த உள்நாட்டு மோதல்களின் வரலாற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இது டிரம்பிடமிருந்து வெளிவந்துள்ள மற்றுமொரு வியக்கத்தக்க கருத்தாகும்.
நெதன்யாகுவைப் பொறுத்தவரை, டிரம்ப்பின் இந்த சமீபத்திய கண்டனத்தையும் அவர் வழக்கம் போலப் பெரிதுபடுத்தாமல் கடந்து செல்லவே வாய்ப்புள்ளது – ஏனெனில், தங்களுக்குள் “நம்பமுடியாத நல்லுறவு” (Unbelievable relationship) இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளதையும் அவர் இதற்கொரு சான்றாகச் சுட்டிக்காட்டுவார்.
இருப்பினும், ஈரானுடனான போரிலிருந்து அமெரிக்காவை விடுவித்துக்கொள்ளும் தனது முயற்சிக்கு நெதன்யாகு முட்டுக்கட்டையாக இருப்பதாக அதிபர் டிரம்ப் கருதுவதால், தனது நட்பு நாட்டைப் பகிரங்கமாகக் கண்டிக்கும் அவரது வேகம் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகிறது.
மேலும், இஸ்ரேலுக்கான பாரம்பரிய குடியரசுக் கட்சியின் ஆதரவுக்கு எதிராக, டிரம்ப்பின் ‘மகா’ (MAGA) இயக்கத்தின் ஒரு பிரிவினரிடையே தீவிரமடைந்து வரும் எதிர்ப்பையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.