இலங்கையின் முதலீட்டுச் சூழல் தொடர்பான வெளிப்படைத்தன்மையும் விதிமுறைகளும் தனியார் துறைக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைய வேண்டும் என இலங்கையிலுள்ள இந்தோனேசியத் தூதுவர் தேவி குஸ்தினா டோபிங் (Dewi Gustina Tobing) வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முதலீட்டுச் சூழல் குறித்து இவ்வாறு வலியுறுத்தியுள்ள சமீபத்திய வெளிநாட்டுத் தூதுவர் இவராவார்.
இலங்கையிலுள்ள தூதரக அதிகாரிகளின் தலைவராகவும் (Dean of the Diplomatic Corps) விளங்கும் இந்தோனேசியத் தூதுவர், கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation) ஏற்பாடு செய்திருந்த வழக்கமான வட்டமேசை விவாதத்தின் போது, இலங்கையின் முதலீட்டுச் சூழல் குறித்த அவரது மதிப்பீடு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடு. முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் நாம் வளர்ச்சியைக் காண வேண்டும். விதிமுறைகளை ஒருமுகப்படுத்துவதற்கோ அல்லது சீரமைப்பதற்கோ (harmonise) இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் மீண்டும் கூறுகிறேன், அது வெளிப்படைத்தன்மை குறித்து நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து விதிமுறைகளும் தனியார் துறைக்கு சாதகமானதாக அமைய வேண்டும். மேம்படுத்தப்பட்ட முதலீட்டுச் சூழலும், நாட்டின் மூலோபாய இருப்பிடமும் அதிக முதலீட்டாளர்களை நாட்டிற்கு ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இலங்கையும் இந்தோனேசியாவும் ஒத்த பின்னணியைக் கொண்ட நாடுகள் என்று குறிப்பிட்ட அவர், இரு நாடுகளின் பொருளாதாரங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதை விட, பரஸ்பரம் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் (complementary) தன்மையைக் கொண்டுள்ளன என்றார்.
“நாங்கள் ஒரே மாதிரியான அக்கறைகளையும் ஒத்த பின்னணிகளையும் கொண்டுள்ளோம். இந்தோனேசியா ஒரு விவசாய மற்றும் தொழிற்துறை நாடாகும். இலங்கையும் ஒரு நல்ல தொழிற்துறைத் தளத்தைக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நாங்கள் இரு நாடுகளுக்கும் அதிக நன்மைகளைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். அதே நேரத்தில், எங்களது நட்பு நாட்டுடன் அதன் பலன்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் விரும்புகிறோம். இந்தோனேசியாவில், எங்களது பல தொழில்கள் இடைநிலைச் செயல்பாட்டில் (intermediate process) உள்ளன. இது இலங்கையின் தொழிற்துறைக்கு நன்மை பயக்கும், ஏனெனில் இந்த வளங்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடும்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகளும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தனது உள்நாட்டுத் தொழில்துறைகளுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில், இந்தோனேசிய தயாரிப்புகளிலிருந்து எவ்வாறு சிறந்த பலனைப் பெறலாம் என்பதைப் பரிசீலிப்பது முக்கியம் என்று அவர் கூறினார். இத்தகைய விநியோகங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்படலாம், இது பரந்த வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
“இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இந்த உறவை போட்டித்தன்மை (competitiveness) மற்றும் பரஸ்பர நிறைவுத்தன்மை (complementary) என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இரு நாடுகளும் தேங்காய் போன்ற ஒரே மாதிரியான பொருட்களை உற்பத்தி செய்கின்றன,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், இதை முற்றிலும் ஒரு போட்டியாகப் பார்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பரஸ்பரம் ஒருவரையொருவர் பூர்த்தி செய்யும் உறவாகப் புரிந்து கொள்ள முடியும். தற்போது, இலங்கை ஏற்கனவே இந்தோனேசியாவிலிருந்து கணிசமான அளவு தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நிலையான அரசியல் சூழல், நெகிழ்ச்சியான பொருளாதாரச் செயல்பாடு மற்றும் சுறுசுறுப்பான சர்வதேச ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தோனேசியா தற்போது தேசிய வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்து வருவதாக அவர் கூறினார்.
இந்தோனேசியா தனது போட்டித்தன்மை, நெகிழ்ச்சி மற்றும் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் (Prabowo Subianto) தலைமையின் கீழ், எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சவால்களுக்கு இந்தோனேசியாவைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் பல முக்கிய முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் இந்தோனேசியாவின் ‘கோல்டன் விஷன் 2045’ (Golden Vision 2045) நோக்கிய பரந்த பயணத்தின் ஒரு பகுதியாகும்; இது இந்தோனேசியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவிற்குள் வளர்ந்த, வளமான மற்றும் உலகளவில் செல்வாக்குமிக்க நாடாக மாறுவதற்கான எங்களது நீண்ட கால பார்வையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.