2026 ஜூன் 19
காரி ரோஸ் (Gary Rose)
வான்கூவர் ஸ்டேடியத்தில் உள்ள பிபிசி ஸ்போர்ட் ஊடகவியலாளர்
அது முற்றிலும் எல்லையற்ற மகிழ்ச்சியின் தருணமாக இருந்திருக்க வேண்டும்.
கனடா, தனது முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கத்தாருக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்து, உலகக் கிண்ண வரலாற்றில் தனது முதலாவது வெற்றியை வான்கூவர் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் உற்சாகக் கோஷங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
இதன் மூலம் அவர்கள் அடுத்த சுற்றான (Last 32) பகுதிக்குள் நுழைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். எனினும், இந்த மாபெரும் வெற்றிக் கொண்டாட்டங்கள் அனைத்தும் இஸ்மாயில் கோனே (Ismael Kone) அடைந்த கொடூரமான காயத்தினால் சோகமாக மாறின.
போட்டியின் இரண்டாவது பாதியின் 8ஆவது நிமிடத்தில், கனடா அணி 3-0 என முன்னிலையில் இருந்தபோது இந்தச்ம்பவம் நடந்தது. வாட்ஃபோர்ட் அணியின் முன்னாள் நடுகள வீரரான கோனே, பந்தைப் பெற்றுக்கொண்ட சில நொடிகளில், கத்தார் வீரர் அசிம் மடிபோ (Assim Madibo) பந்தைப் பறிப்பதற்காக அவரை நோக்கி மிக மோசமான முறையில் பாய்ந்தார்.
கோனேயின் அலறலும், அவரைச் சுற்றியிருந்த ஏனைய வீரர்களின் அதிர்ச்சியடைந்த முகங்களுமே அந்த காயத்தின் தீவிரத்தை உணர்த்தின.
சாசுவோலோ (Sassuolo) அணியின் 24 வயதான நடுகள வீரரான கோனே, தனது கால் எலும்பு உடைந்ததை உணர்ந்து அதிர்ச்சியிலும் கடுமையான வலியிலும் துடித்தார். நடுவர் உடனடியாகப் போட்டியை நிறுத்தி மருத்துவக் குழுவினரை உள்ளே அழைத்தபோது, சக கனடா வீரர்கள் கவலையுடன் அவரை நோக்கி ஓடினர்; அதேநேரம் தவறிழைத்த மடிபோ அதிர்ச்சியில் தனது கைகளால் தலையை மூடிக்கொண்டார்.


நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட விரக்தியும் ஆத்திரமும் இரு அணி வீரர்களுக்கும் இடையே எல்லையைத் தாண்ட, மைதானத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் (Scuffle) வெடித்தது.
இருப்பினும், தனது உலகக் கிண்ணக் கனவை இந்த காயம் முடிவுக்குக் கொண்டுவந்த போதிலும், கோனே ஸ்டிரெச்சரில் (Stretcher) வெளியேற்றப்படும் போது ரசிகர்களை நோக்கித் தனது பெருவிரலை உயர்த்தி (Thumbs up) சைகை காட்டினார்.
“இந்தச் சம்பவம் எங்களது கண்களுக்கு முன்னாலேயே நடந்தது, எலும்பு உடையும் சத்தம் அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாகக் கேட்டது” என்று கனடா அணியின் பயிற்றுவிப்பாளர் ஜெஸ்ஸி மார்ஷ் (Jesse Marsch) தெரிவித்தார்.
“நான் இன்னும் இஸ்மாயிலுடன் பேசவில்லை, அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அறுவை சிகிச்சைக்குத் தயாராகி வருகிறார்.
இந்த காயத்தின் தன்மையினாலும், இஸ்மாயில் எங்களது அணியின் இதயத் துடிப்பாக விளங்குவதாலும் அணியின் அனைத்து வீரர்களும் சற்று நிலைகுலைந்து போயுள்ளனர். இது எங்களுக்குப் பேரிழப்பாகும்” என்றார்.
காயத்தின் பாரதூரமான தன்மையையும் மீறி, கோனே மைதானத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.
“இது இஸ்மாயிலின் மனவலிமையைக் காட்டுகிறது, அதேநேரம் இது ஒரு அசாத்தியமான அணி. இந்த அணியின் குணம் (Character) குறித்து நான் பல வருடங்களாகக் கூறி வருகிறேன். அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்த போதிலும், போட்டியில் எவ்வாறு கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டினர்” என்று மார்ஷ் மேலும் கூறினார்.
அவர்கள் காட்டிய அந்த அர்ப்பணிப்பு ஆட்டத்திலும் எதிரொலித்தது – அங்கிருந்து ரசிகர்களும் வீரர்களும் ஒன்றிணைந்து செயல்பட, கனடா அணி மேலும் மூன்று கோல்களை அடித்து அசத்தியது.
இரண்டாவது பாதியின் குடிநீர் இடைவேளையின் (Hydration break) போது, பயிற்றுவிப்பாளர் மார்ஷ் கண்ணீர் விட்டு அழுதார். கோனேயிற்குப் பதிலாக களம் புகுந்து அணியின் நான்காவது கோலை அடித்த நதன் சலிபா (Nathan Saliba), தனது சக வீரரின் ஜெர்சியை (Shirt) உயர்த்திப் பிடித்து தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.
“அவர் முன்னெப்போதையும் விட மிகவும் வலிமையுடன் மீண்டு வருவார், அவரது சிறந்த கால்பந்து வாழ்க்கை தொடரும். இஸ்மாயில் இந்த போட்டியை நாம் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றுதான் விரும்புவார் என நான் குடிநீர் இடைவேளையின் போது வீரர்களிடம் கூறினேன் – அதைத்தான் எங்களது வீரர்களும் செய்தனர்” என்று மார்ஷ் குறிப்பிட்டார்.
கனடா மற்றும் கோனேயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
போட்டிக்குப் பின்னர், கத்தார் வீரர் மடிபோ தனது தவறுக்காக கோனேயிடம் மன்னிப்புக் கோரியதை மார்ஷ் உறுதிப்படுத்தினார், ஆனால் அந்தத் தாக்குதலில் எந்தவொரு கெட்ட எண்ணமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அவர் எங்களது ஆடை மாற்றும் அறைக்கு (Dressing room) வந்து மன்னிப்புக் கேட்டார். அவர் இவ்வளவு கொடூரமான ஒரு காயத்தை ஏற்படுத்த நினைத்திருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன், அதற்காக நான் அவர் மீது தவறு கூறவில்லை. ஆனால் அவர்களின் மாற்று வீரர்களின் பெஞ்சில் (Bench) இருந்து வெளிப்பட்ட எதிர்வினையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று மார்ஷ் கூறினார்.
இந்த மோசமான ஆட்டத்திற்காக மடிபோவிற்கு சிவப்பு அட்டை (Red card) காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதை அடுத்து, கத்தார் அணி 9 வீரர்களுடன் போட்டியை நிறைவு செய்ய வேண்டியிருந்தது – ஏனெனில் முதல் பாதியிலேயே தாஜோன் புகேனனை வீழ்த்தியதற்காக ஹோமம் எல் அமினும் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியிருந்தார்.
கனடாவின் பணி இன்னும் முடிவடையவில்லை என்றாலும், உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றை (Last 32) உறுதி செய்வதற்கு அவர்களுக்கு இன்னும் ஒரேயொரு புள்ளி மட்டுமே தேவைப்படுகிறது. தங்களது முதல் போட்டியில் போஸ்னியா-ஹெர்சகோவினாவுடன் 1-1 என சமநிலை பெற்று, உலகக் கிண்ண வரலாற்றில் தனது முதல் புள்ளியைப் பெற்ற ஒரு அணிக்கு இது மிகப்பெரியதொரு சாதனையாகும்.
அவர்கள் தங்களது அடுத்த போட்டியில் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கின்றனர். அதில் வெற்றி பெற்றால் குழுவில் முதலிடத்தைப் பிடித்து, அடுத்த கட்டப் போட்டிகளையும் கனடாவிலேயே விளையாடுவதை உறுதி செய்யலாம்.
“அவர்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை உங்களால் பார்க்க முடிகிறது. நான் இந்தப் பொறுப்பை ஏற்றபோது முதலில் கவனித்த விஷயங்களில் ஒன்று, அவர்கள் எவ்வளவு நெருக்கமாகவும் பிணைப்போடும் இருக்கிறார்கள் என்பதுதான். இதுபோன்றதொரு தருணத்தில் அவர்களுக்கு எனது உதவி அதிகம் தேவைப்படாது, அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினரும் இங்கு வந்துள்ளனர். நாளை எங்களுடைய குடும்ப பார்பிக்யூ (Family barbecue) விருந்து உள்ளது, அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அப்போது கோனேயின் நினைவுகளும் எங்களுடன் இருக்கும்” என்று மார்ஷ் கூட்டுப் பிணைப்பு குறித்துப் பேசினார்.
கனடாவில் கால்பந்து யுகம் தொடங்கிவிட்டதா?
கோனேயின் காயம் மார்ஷ் மற்றும் வீரர்களின் சிந்தனையில் ஆழமாக இருந்தபோதிலும், போட்டியின் இறுதி விசிலுக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஒரு கணம் கொண்டாடுவதற்கு அவர்கள் தவறவில்லை.
அனைத்து வீரர்களும் மைதானத்தின் நடுவே ஒன்றுகூடி நின்ற பிறகு, மார்ஷ் அவர்களை வழிநடத்தி மைதானத்தைச் சுற்றி வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி செலுத்தினார். லீட்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான மார்ஷ், மைதானத்தின் ஒலிபெருக்கிகளில் ஒலித்த பாடலுக்கு ஏற்ப காற்றில் தனது கைகளை உயர்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
மார்ஷ் மே 2024 இல் கனடா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு லீட்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதாலும், அவரது சொந்த நாடான அமெரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு மறுக்கப்பட்டதாலும், தனது திறமையை நிரூபிக்க அவருக்குக் கிடைத்த ஒரு சிறந்த நல்வாய்ப்பாக இது அமைந்தது.
“இதன் மிகப்பெரிய இலக்கு என்பது சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கிண்ணப் போட்டியாகும். ஆனால், அதையும் தாண்டி இந்த நாட்டில் இந்த விளையாட்டை மாற்றுவதும், கனடிய கால்பந்திற்கான ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதுமே எங்களது நோக்கமாகும்” என்று அவர் கூறினார்.
“இதை யாரும் மறக்க மாட்டார்கள். எந்தவொரு கனடியனும் இந்த நாளை மறக்க மாட்டான். இந்த வரலாற்றுத் தருணம் நிகழ்ந்தபோது தாங்களும் அங்கு இருந்ததாகக் கூறிக் கொள்ள 40 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டின் வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத, மிக முக்கியமான தருணமாகும்” என்று உணர்ச்சிப்பொங்கக் கூறினார் ஜெஸ்ஸி மார்ஷ்.
