இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணம் ஹேக்கர் (Hacker) தாக்குதலால் இழக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், அந்தப் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இப்பிரச்சினையானது ‘குளோபல் ரெமிட்’ (Global Remit) நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேலிய அதிகாரிகளால் எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையதே தவிர, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுவது போல சைபர் தாக்குதல் (Cyber attack) எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த சட்ட நடவடிக்கைகள் காரணமாக சுமார் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 5,100 இலங்கைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வங்கி மற்றும் இராஜதந்திர மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதேநேரம் இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக மாற்று பணப்பரிமாற்ற வழிகள் (Alternative remittance channels) ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் எல் நினோ (El Niño) போன்ற காலநிலை தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச வருவாயை மேம்படுத்துவதில் வரி சீர்திருத்தங்கள் மற்றும் வரி முறையை டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை முக்கியமான படிகளாகும் என்று சுட்டிக்காட்டிய ஹேமச்சந்திர, வீணடிப்பு மற்றும் ஊழல்களைக் குறைத்து, பொதுப் பணத்தைப் பொதுமக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்வதாகவும் மேலும் கூறினார்.