கொழும்பு பங்குச்சந்தையின் வர்த்தகத்தில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த கணக்குகள் (Active accounts) தவறுதலாக முடக்கப்பட்டதை அடுத்து, நேற்று பங்குச்சந்தை நடவடிக்கைகள் ஆரம்பிப்பதில் இரண்டு மணித்தியாலங்களும் முப்பது நிமிடங்களும் தாமதம் ஏற்பட்டது.
கடந்த 2026 ஜூன் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதற்கு அமைவாக, 15 வருடங்களுக்கும் மேலாக எவ்வித பரிவர்த்தனைகளும் இன்றி செயலற்றுக் காணப்படும் சிடிஎஸ் (CDS) கணக்குகளை முடக்கும் நடவடிக்கையை சென்ட்ரல் டெபாசிட்டரி சிஸ்டம் லிமிடெட் (CDS) கடந்த 2026 ஜூன் 30 ஆம் திகதி மேற்கொண்டதாக கொழும்பு பங்குச்சந்தை (CSE) தெரிவித்துள்ளது.
இந்த முடக்கல் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட போது, சில செயலில் உள்ள (Active) சிடிஎஸ் கணக்குகளும் எதிர்பாராதவிதமாக முடக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் நேற்று முன்தினம் வர்த்தகத்திற்கு முந்தைய நேரத்தின் (Pre-open session) போது கண்டறியப்பட்டது. அதற்கமைய, தவறுதலாக முடக்கப்பட்ட சிடிஎஸ் கணக்குகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக, சந்தை ஏல அழைப்பு (Market Auction Call / pre-open) நேரம் நீட்டிக்கப்பட்டதாக கொழும்பு பங்குச்சந்தை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழமையான வர்த்தக நடவடிக்கைகள் முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகின.
வர்த்தகம் ஆரம்பிப்பதில் ஏற்பட்ட இந்த தாமதம் காரணமாக ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை, நியாயமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை நிலவரத்தை உறுதி செய்வதற்காகவே வர்த்தகத்திற்கு முந்தைய நேரத்தை நீடிப்பது அவசியமாக இருந்தது என்றும் விளக்கமளித்துள்ளது.